வீடு கட்ட வரைபட அனுமதிக்கோரி விண்ணப்பித்தவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது

காஞ்சிபுரம்: வீடு கட்ட வரைபட அனுமதிக்கோரி விண்ணப்பித்தவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடிபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த வேண்டா சுந்தரமூர்த்தி பதவி வகித்துவருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அய்யங்கார்குளம் பகுதியில் வீட்டுமனைவாங்கி, அதில் வீடுகட்ட திட்டமிட்டிருந்தார். அதற்காக வீடு கட்ட வரைபட திட்ட அனுமதி பெறுவதற்காக அய்யங்கார் குளம் ஊராட்சி தலைவர் வேண்டா சுந்தரமூர்த்திடம் விண்ணப்பித்துள்ளார். வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டு கிருஷ்ணமூர்த்தியை நீண்ட நாட்களாக ஊராட்சி தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

எனவே, கிருஷ்ணமூர்த்தி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து, அதை கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன் அடிப்படையில், நேற்று அய்யங்கார்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி கூறியதின்பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருண்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் புவனாவிடம் அளித்துள்ளார்.

அப்போது மறைந்திருந்து இதனை கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், ஊராட்சி செயலர் புவனா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தியை கைது செய்து அவர்களிடம் இருந்த ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: