வியாசர்பாடி குட்ஷெட் பகுதியில் மாமூல் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலை

பெரம்பூர்: வியாசர்பாடி குட்ஷெட் பகுதியில் லாரி டிரைவர்களை மிரட்டி, மாமூல் கேட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர். வியாசர்பாடி குட்ஷெட் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் லாரிகள் வந்து அரிசி, மிளகாய், கோதுமை உள்ளிட்ட பொருட்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்வது வழக்கம்.  இதனால் அப்பகுதியில் எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்ற கால தாமதமாகும்போது, லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.  அப்படி நிறுத்தி வைக்கப்படும் லாரி டிரைவர்களிடம் தினமும் வந்து சிலர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். மாமுல் தரவில்லை என்றால், லாரிகளை இங்கே நிறுத்தக்கூடாது என்று டிரைவர்களுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து லாரி டிரைவர்கள் தங்கள் உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து வியாசர்பாடி குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பரந்தாமன் (48) இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தொடர்ந்து லாரி டிரைவர்களை மிரட்டி வியாசர்பாடி பகுதியில் சிலர் மாமூல் வசூலித்து வருவதாகவும், மேலும் மாமுல் தரவில்லை என்றால் லாரி டிரைவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.  இதுகுறித்து விசாரணை செய்த எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (34) மற்றும் வியாசர்பாடி தாமோதரன்நகர் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (22) ஆகிய இருவரையும் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பார்த்தசாரதி என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: