கொலை வழக்கில் பிடிக்க சென்றபோது எஸ்.ஐ.க்கள், ஏட்டுக்கு அரிவாள் வெட்டு 2 ரவுடிகளை சுட்டுப்பிடித்தது போலீஸ்: தூத்துக்குடி, தஞ்சையில் அதிரடி

சென்னை: தூத்துக்குடி வக்கீல் கொலையில் முக்கிய குற்றவாளி, எஸ்ஐ, ஏட்டுவை வெட்டி விட்டு தப்ப முயன்றபோது அவரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதேபோல தஞ்சையில் எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார். இவர் கலெக்டர் அலுவலகம் அருகே நகைக்கடன் நிறுவனமும் நடத்தி வந்தார். கடந்த பிப்.22ம் தேதி நகைக்கடன் நிறுவனத்துக்கு வந்த முத்துக்குமார், 2 பைக்குகளில் வந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான கோரம்பள்ளம் ஜெயப்பிரகாசை தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அடுத்த தட்டப்பாறை அருகே  மறவன்மடம் காட்டுப்பகுதியில் ஜெயப்பிரகாஷ் பதுங்கி இருப்பதாக எஸ்.பி பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் அவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது ஜெயப்பிரகாஷ்  அரிவாளால் ஏட்டு சுடலைமணியின் இடது கையில் வெட்டினார். மடக்க முயன்ற எஸ்ஐ ராஜபிரபுவையும் அரிவாளால் வெட்டினார். அவருக்கு இடது தோள் பட்டையிலும், இடது கையிலும் வெட்டு விழுந்தது. இதனையடுத்து தற்காப்புக்காக எஸ்ஐ ராஜபிரபு  9 எம்எம் பிஸ்டலால் ஜெயப்பிரகாஷ் மீது ஒரு ரவுண்ட் சுட்டார். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது.

சுருண்டு விழுந்த அவரை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து, தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த எஸ்ஐ ராஜபிரபு, ஏட்டு சுடலைமணி  ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். காயம் அடைந்த போலீசாரை பார்த்து ஆறுதல்  கூறினர். தஞ்சை: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 2021ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நீடாமங்கலம் பூவனூரை சேர்ந்த ரவுடி ராஜ்குமார் கடந்த 10ம்தேதி கொரடாச்சேரி அருகே கமலாபுரத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான நீடாமங்கலம் ஒளிமதி கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின்பாரதி, வீரபாண்டி உட்பட 5 பேரை தனிப்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த பிரவீன் (22), தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அடுத்த மல்லிப்பட்டினம் மனோரா பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு சென்றனர். அங்கு மறைந்திருந்த பிரவீன், திடீரென அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றார்.

இதில் எஸ்எஸ்ஐ இளங்கோவனின் வலது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற பிரவீன்மீது இன்ஸ்பெக்டர் ராஜேஸ் துப்பாக்கியால் இடது காலில் சுட்டார். முழங்காலுக்கு கீழ் குண்டு பாய்ந்து தடுமாறிய பிரவீனை போலீசார் மடக்கி பிடித்தனர். காயமடைந்த எஸ்எஸ்ஐ இளங்கோவன் மற்றும் பிரவீன் ஆகியோரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட பிரவீன் மீது 2019ல் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது திருவாரூர் டவுன் எஸ்ஐ பாரதநேருவை கொலை செய்ய முயன்ற வழக்கு, திருவாரூரில் வழிப்பறி வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளது.

* ஒரே மாதத்தில் 9 ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு

ரவுடிகளை ஒடுக்குவதிலும், குற்றவாளிகளை பிடிப்பதில் தமிழ்நாடு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரே மாதத்தில் 9 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 13ம் தேதி கோவை நீதிமன்றம் அருகே கோகுல் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பிடிபட்ட ரவுடிகளில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கவுதம், ஜோஸ்வா ஆகியோரை போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். திருச்சியில் பிப்ரவரி 20ம் தேதி போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி அண்ணன் தம்பிகளான  துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி சென்னை அயனாவரத்தில் ரவுடி சூர்யாவை பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கீதா துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.  அடுத்த ஒரு வாரத்தில் பிப்ரவரி 28ம் தேதி மதுரையில் ரவுடி வினோத் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இப்படி கடந்த மாதத்தில் 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை 6 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். ரவுடிகளை சுட்டு பிடிக்கும் நோக்கம் இல்லை, அவர்கள் போலீசாரை தாக்குவதால் தற்காப்புக்காகத்தான் போலீசார் சுடுகின்றனர் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். அதன்படி ரவுடிகள் வேட்டை இம்மாதமும் தொடர்கிறது. கடந்த 7ம் தேதி கோவையில் சஞ்சய் ராஜா என்ற கொலை வழக்கு ரவுடி தப்பி ஓட முயன்றபோது சுட்டு பிடிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடியில் 2 ரவுடிகள் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு தொடர்வதால் ரவுடிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: