சாலை விபத்துகளை தடுக்கும் ஆன்டி ஸ்லீப் கிளாஸ்: டிரைவர்கள் கண் மூடினால் அலாரம் அடிக்கும்

* 10ம் வகுப்பு மாணவன் சாதனை

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) 2021 அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டில் 2021ல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2020ல் 3,68,828 ஆக இருந்த சாலை விபத்துகள் 2021ல் 4,22,659 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் மொத்தம் நடந்த 4,22,659 விபத்துகளில் 4,03,116 விபத்துகள் சாலையிலும், 17,933 ரயில் விபத்துகளாகவும், 1,550 விபத்துகள் ரயில் தண்டவாளம் கடக்கும் போதும் நடந்துள்ளன. இவற்றில் முறையே சாலையில் 1,55,622 உயிரிழப்புகளும், ரயில் விபத்துகள் 16,431 ஆகவும், தண்டவாள விபத்துகள் 1807 ஆகவும் உள்ளன. 2020ஐ விட 2021ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டில் 57,090 சாலை விபத்துகளும், மத்தியப் பிரதேசத்தில் 49,493 விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 36,509 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 30,086 விபத்துகளும், கேரளாவில் 33,501 விபத்துகளும் நடந்துள்ளன. மிசோரம், பஞ்சாப், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை மொத்த விபத்துகளில் 3,73,884 பேர் காயமடைந்தனர், 1,73,860 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேர் இறந்தனர். தமிழகத்தில் 16,685 பேர் இறந்தனர். மகாராஷ்டிராவில் 16,446 பேர் இறந்தனர். சாலை விபத்துகளில் பெரும்பாலும் டிரைவர்கள் தூக்க கலக்கத்தினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கவும், மதிப்புமிக்க உயிர்களை காக்கும் விதமாக தூக்கத்தில் விழும் டிரைவர்களை எச்சரிக்கை செய்து எழுப்பும் விதமாகவும் ஆன்டி ஸ்லீப் கிளாஸ் தயாரித்துள்ளார் தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் உவைஷ் (15). தூத்துக்குடி முத்தையாபுரம் சாந்திநகர் 2 பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். பர்னிச்சர் வர்த்தகரான இவர் சவுதி அரேபியாவில் உள்ளார். இவரது மூத்த மகன் சமீர், மகள் ரிஸ்வானா, இளைய மகன் உவைஷ் தான் இந்த ஆன்டி ஸ்லீப் கிளாஸ்ஐ வடிவமைத்துள்ளார். இயற்கையிலேயே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டராக உள்ள உவைஸ். தன்னைப்போல தனது நண்பர்கள் யாருக்கும் இந்த ஆவல் உள்ளதா என கண்டறிந்து அவர்களை இணைத்து ரேக்கிங் சொல்யூசன்ஸ் என்ற வாட்ஸ் அப்குழு மூலம் ஒருங்கிணைத்துள்ளார். இதில் தற்போது 13 இளம் கண்டுபிடிப்பாளர்கள் இணைந்துள்ளனர்.

மேலும் உவைஷ் ஏற்கனவே பல அறிவியல் நுட்ப பொருட்களை வடிவமைத்துள்ளார். தீ அலாரம் மற்றும் முதலுதவி செய்ய உதவும் சர்வைவல் வாட்ச் ஒன்றும் அவர் தயாரித்துள்ளார். இதுவும் பலரால் பாராட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் விபத்துகளில் இருந்து கார், பஸ், லாரி மற்றும் டூவீலர் ஓட்டிகளை காக்கும் பொருட்டு இந்த ஆன்டி ஸ்லீப் கிளாஸ் தயாரித்துள்ளார்.

இதற்காக அவர் ஒரு 9 வோல்ட் சிறிய லித்தியம் பாலிமர் பேட்டரி, ஒரு இன்ப்ரா ரெட் சென்சார், ஒரு அலாரம் அடிக்கும் பஸ்சர் மற்றும் கண் கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்தி இதனை எளிதாக தயாரித்துள்ளார். இந்த ஆன்டி ஸ்லீப் கிளாஸ்சை வழக்கம் போல அணியும் கண்ணாடி போல நாம் அணிந்து கொள்ளலாம். அதில் இந்த இன்ப்ரா ரெட் சென்சார் இணைக்கப்பட்டு அது ஆக்டிவாக செயல்பட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து காதுகளின் அருகே சிறிய சவுண்ட் பஸ்சர் அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் ஒட்டும் டிரைவர் குறைந்தபட்சம் 2 வினாடிக்கு மேல் கண் அயர்ந்து விட்டால் அவரது இமைகள் மூடிவிடும். உடனே இந்த இன்ப்ரா ரெட் சென்சார் இமைகளில் பட்டு ஒரு போட்டோ எலக்ட்ரிக் எபக்ட் உருவாகி பஸ்சரை தானகவே அழுத்தி விடும். இதனையடுத்து கண் இமைகள் திறக்கும் வரையில் அந்த பஸ்சருடன் இணைந்த சிறிய ஸ்பீக்கர் எச்சரிக்கை மணியை ஒலித்துக் கொண்டே இருக்கும். இதனால் தூங்கும் வாகன ஓட்டிகள் விழித்துக்கொண்டு விபத்தை தவிர்க்கலாம். மிக குறைந்த செலவில் விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றும் இந்த ஆன்டி ஸ்லீப் கிளாசை மாணவர் உவைஷ் தயாரித்துள்ளார். அவரது இந்த கண்டுபிடிப்பை பள்ளி முதல்வர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், நாமக்கல்லில் உள்ள டிரைவர்கள் அசோசியேசன், கிரைம் இன்ஸ்வெஸ்டிகேசன் ஆர்க்கனிசேசன், ட்ரக் டிரைவர்ஸ் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் பாராட்டி ரொக்க பரிசுகள் வழங்கியுள்ளன. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவரது கண்டுபிடிப்பை வியந்து பாராட்டு தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

* ராணுவம், போலீசுக்கும் உதவும்... மாணவர் உவைஷ் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு நிர்வாகம் என்ற அமைப்பின் மூலம் பெரும்பாலான விபத்துகள் வாகன ஓட்டிகள் தூங்கிவிடுவதன் காரணமாகத்தான் நடக்கினறன என்று அறிந்து கொண்டேன். 40% விபத்துகளுக்கு இதுதான் காரணம் என்பதால் இந்த விபத்துகளை தடுக்க நாம் ஏன் ஒரு கருவியை தயாரிக்க கூடாது என்ற கேள்விதான் எனக்குள் இதனை தயாரிக்க தூண்டுகோலாக இருந்தது. இந்த ஆன்டி ஸ்லீப் கிளாஸ் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்ல இரவு வாட்ச்மேன்கள், ஏடிஎம் செக்யூரிட்டிகள், ராணுவ வீரர்கள், காவல்துறையினர் என பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும். இதனை தயாரிக்க தற்போது வெறும் 1000 ரூபாக்குள் தான் ஆகிறது. இதனை மொத்தமாக தயாரித்தால் இன்னும் தயாரிப்பு செலவு குறையும். அணிந்து கொள்வதும் எளிதுதான். இதனை அணிந்தால் முற்றிலும் விபத்துகளையும் வீண் உயிர்பலிகளையும் தவிர்க்கலாம். தற்போது எனது வாட்ஸ்அப் குருப் நண்பர்களுடன் வேறு பொருட்கள் தயாரிப்புகள் குறித்து டிஸ்கஸ் செய்துள்ளேன். எதிர்காலத்தில் உலகிற்கு பயன்படும் பல்வேறு பொருட்கள் தயாரிக்க திட்டம் உள்ளது. மேலும் 10ம் வகுப்பு பொது தேர்வு நெருங்குவதால் இதுபோன்ற கண்டுபிடிப்புகளை சில மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளேன்’ என்று கூறினார்.

* இப்பகுதியில் இடம்பெறும் கண்டுபிடிப்புகளுக்கு வாரம் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இதுபோல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல் இருந்தால் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மாணவர் கண்டுபிடிப்பு  சண்டே ஸ்பெஷல் தினகரன், 229, கச்சேரி  சாலை, மயிலாப்பூர்,  சென்னை-600 004.  emai*: stude*ti*ve*tio*@di*akara*.com

Related Stories: