சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திய ரூ.3.80 கோடி தங்கம் பறிமுதல்; 11 பேர் சிக்கினர்

கோவை: கார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த ரூ.3.80 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்தது. இதில், வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். சந்தேகத்தின் பேரில் பயணிகளை ஸ்கேனரில் பரிசோதித்தபோது 11 பேரின் ஜீன்ஸ் பேண்ட், ஷூ, பேக்குகளிலும், தங்கத்தை பேஸ்ட் போல் மாற்றியும், 3 பயணிகள் கட்டியாக பாலித்தீன் கவரில் போட்டு ஆசனவாயில் மறைத்தும்  கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இந்த 11 பேரிடம் இருந்து ரூ.3.80 கோடி மதிப்பிலான 6.62 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜூனன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். மற்ற 10 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தை கடத்தி வரும் இவர்கள் தனியார் நிறுவன பணி என சார்ஜா சென்று அங்கிருந்து தங்கத்தை கடத்தி வர அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என வருவாய் புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர். தங்கத்தை கடத்தி வந்து கோவையில் ரகசிய இடத்தில் ஒப்படைக்க முயற்சி செய்திருப்பதாக தெரிகிறது. அதற்குள் இவர்கள் சிக்கி விட்டனர். இவர்களின் செல்போன் பேச்சுக்களை வைத்து போலீசாரும், வருவாய் புலனாய்வு பிரிவினரும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

* திருச்சியில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து நேற்றுமுன்தினம் ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர் மினி கம்ப்யூட்டர் சிபியூ-வில் உருளை வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த 494 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் விமானம் வருகை பகுதியில் உள்ள கழிவறையில் கிடந்த 327 கிராம் கொண்ட 3 தங்க செயின்கள், புறப்படும் பகுதியில் உள்ள கழிவறையில் கிடந்த 1093 கிராம் எடை கொண்ட தங்க கட்டி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.99,71,520 மதிப்புள்ள   தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: