தங்கக் கடத்தல் வழக்கில் பினராயிக்கு எதிரான ஆதாரங்களை ஒப்படைக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து: மிரட்டலுடன் 30 கோடி பேரமும் பேசினர் : சொப்னா பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்:  தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிரான ஆதாரங்களை ஒப்படைக்க தன்னிடம் ஒருவர் 30 கோடிக்கு பேரம் பேசியதாகவும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொப்னா கூறியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டவர் சொப்னா. இவர் அமீரக துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்தார். தங்கக் கடத்தல் வழக்கை சுங்க இலாகா, மத்திய அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவை விசாரணை நடத்தின. இந்த வழக்கில் சொப்னா தவிர, அமீரக தூதரக மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் சொப்னாவுக்கும், கேரள முதல்வர் பினராய் விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில் சொப்னா நேற்று பெங்களூருவில் வைத்து தன்னுடைய முகநூலில் நேரலையாக வந்து  சில பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியது: கடந்த சில தினங்களாக விஜய் பிள்ளை என்பவர் என்னிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று கூறி பலமுறை போனில் தொடர்பு கொண்டார். கடைசியில் கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரூவிலுள்ள ஒரு ஓட்டலில் வைத்து அவரை சந்திக்க நான் சம்மதித்தேன். அப்போது, தன்னுடைய சொந்த ஊர் கண்ணூர் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேரள மாநில செயலாளர் கோவிந்தன் கேட்டுக்கொண்டதன் படி வந்திருப்பதாகவும் கூறினார். 30 கோடி பணம் தரத் தயாராக இருப்பதாகவும், அதை வாங்கிக் கொண்டு முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான தங்கக் கடத்தல் ஆதாரங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்றும், பெங்களூருவிலிருந்து ஹரியானாவுக்கோ அல்லது ஜெய்ப்பூருக்கோ சென்றுவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவதாகவும் அந்த நபர் மிரட்டினார். இது தொடர்பாக நான் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர், டிஜிபி மற்றும் மத்திய அமலாக்கத் துறையிடம் புகார் கொடுத்துள்ளேன். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். என்னுடைய உயிர் போனாலும் முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிரான எல்லா ஆதாரங்களையும் வெளியிடுவேன். என்னை பயன்படுத்தி பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இனி அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: