தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா டெல்லி அமலாக்கத்துறை அலுவலத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவரை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு  தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராம்சந்திர பிள்ளை என்பவரை அமலாக்கத்துறையினர் திங்களன்று கைது செய்தனர். அவர் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா மற்றும் பிறருடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘சவுத் குரூப்’ மதுபான கார்டலை பிரதிநிதித்துவப்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதாவிடம் அமலாக்கத்துறை  விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கவிதாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதில் ‘‘மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை (இன்று)நேரில் ஆஜராக வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கில் கடந்தாண்டு  டிசம்பர்  12ம் தேதி ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்துக்கு நேரில் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்த வலியுறுத்தி கவிதான நாளை (10ம் தேதி) டெல்லி ஜந்தர்மந்தரில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கவிதா கூறுகையில், ‘‘சட்டத்தை மதிக்கும் குடிமகள் என்ற முறையில் விசாரணை அமைப்புக்களுக்கு முழு ஒத்துழைப்பை தருவேன். எனினும் தர்ணா மற்றும் முன்கூட்டி திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் காரணமாக விசாரணைக்கு கலந்து கொள்ளும் தேதி தொடர்பாக சட்டப்பூர்வ கருத்துக்களை பெறுவேன். எங்களது தலைவர் கேசிஆர் மற்றும் ஒட்டுமொத்த பிஆர்எஸ் கட்சியின் போராட்டம் மற்றும் முழக்கத்துக்கு எதிரான இந்த மிரட்டல் தந்திரங்கள் எங்களை ஒருபோதும் தடுக்காது என்று ஒன்றிய அரசுக்கு கூற விரும்புகிறேன்” என்றார்.

Related Stories: