போலீசாரின் தடையை மீறி அண்ணா சாலையில் வாலிபர்கள் பைக்ரேஸ்: 3 பைக்குகள் பறிமுதல்

சென்னை: போலீசாரின் தடையை மீறி அண்ணா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அண்ணா சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் 3 பைக்குகளில் 4 பேர் பைக் ரேசில் ஈடுபட்டனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி தி.நகர் துணை கமிஷனர் அருண் கபிலன் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் பைக் ரேசில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணியில் இறங்கினர். தேனாம்பேட்டை அண்ணா சாலையில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விபத்தை ஏற்படுத்தும் வகையில் அசுர வேகத்தில் கோட்டூர்புரம் பகுதியில் இருந்து அண்ணாசாலை நோக்கி 4 பேர் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே பைக் ரேசில் ஈடுபட்டனர். உடனே தனிப்படை போலீசார் அதிரடியாக பைக் ரேசில் ஈடுபட்ட கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ராகுல் (22), வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ண வம்சி (19), கொருக்குப்பேட்டையை சேர்ந்த அஜய் (18), லோகேஷ் (20) ஆகியோரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 4 பேரையும் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். 4 பேர் மீதும் அபாயகரமாக பைக் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: