திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அழகியநம்பிராயர் திருக்கோயில் உள்ளது. இங்கு நம்பி சுவாமிகள் 5 திருக்கோலங்களில் காட்சி அளிப்பது சிறப்புமிக்கதாகும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா 1ம் திருநாளான இன்று (8ம்தேதி) தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அழகிய நம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ராமானுஜ ஜீயர் முன்னிலையில் கோயில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தினசரி யாக சாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம், காலை மற்றும் இரவில் அழகியநம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர் களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5ம் நாளான வரும் 12ம் தேதி நடக்கிறது. அன்று இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர், மறுநாள் அதிகாலையில் நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10ம் திருநாளான 17ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜண்ட் பரமசிவன் தலைமையில் கோயில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: