தடைகளை தாண்டி சாதிக்கும் பெண்கள்

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மட்டுமல்லாமல் அந்த வாரம் முழுவதும் பெண்மையை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மகளிர் கல்லூரிகளில் ஆடல் பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பெண்களுக்கு பரிசளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டாண்டு காலமாக அடிமையாக நடத்தப்பட்ட பெண்கள் தற்போது கல்வி பயின்று அறிவியல், தொழில்நுட்பம், அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். இது சாதாரணமாக நிகழவில்லை. பல்வேறு போராட்டங்களின் விளைவாகத்தான் உலக மகளிர் தினம் வந்தது. கடந்த 18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே சரிவருவார்கள் என்று முடக்கிவைக்கப்பட்டார்கள்.

இந்தநிலை மாறி, 1850களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் கால்பதிக்க தொடங்கினர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணியில் கால் பதித்தாலும் அவர்களுக்கான ஊதியத்தில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது. ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த பெண்கள் 1910ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினர். இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். எந்தவித சமூக வலைதளங்கள் மற்றும் பெரிய அளவில் தொலைத் தொடர்புகள் இல்லாத காலகட்டத்தில் இந்த உரிமை மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

தங்கள் உரிமைகளுக்காக பெண்கள் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர். அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின். பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்துவந்த கிளாரா, பெண்களின் உரிமைகளை பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கருதினார். அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தினத்தில் தங்களுக்கு ஏற்றார்போல் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தனர்.

அதற்குப் பின் உலகை திரும்பிப்பார்க்க வைத்த புரட்சி என்றால், 1917ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி. இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது என வரலாறு கூறுகிறது. இதனையடுத்து 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில், புரட்சி நடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். க்ரிகோரியன் காலண்டரின்படி அவர்கள் கூறிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8ம் தேதியாக இருந்தது. இதனையடுத்து உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாட வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார்.

அந்த ஆண்டுமுதல் உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. நமது நாட்டில் பெண்கள் தற்போது அனைத்து துறையிலும் கால்பதிக்க ஆரம்பித்து விட்டனர் என்று அனைவரும் பெருமையோடு கூறி வருகின்றனர். ஆனால் இன்றைக்கும் இந்தியாவில் உள்ள பல கிராமங்களில் பல பெண்கள் அடிமைத்தனமாக வீட்டு வேலைகளை மட்டும் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

காரணம் சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்களுக்கு கிடைக்கும் கல்வி கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கி நிற்கிறது.

இந்தியாவில் ஜார்கண்ட், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள கிராமங்க இன்றுவரை பெண்களுக்கு கல்வி அறிவு என்பது மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.

ஆனால், தமிழகத்தின் நிலை வேறு. இங்கு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு தலைவர்கள் பெண்கள் கல்விக்கு, உரிமைக்கு குரல் கொடுத்து  அவர்களுக்காக பல சட்டங்களை இயற்றி உள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை, அவர்கள் வகிக் காத பதவிகளே இல்லை எனும் நிலை உள்ளது. தொடர்ந்து, பெண்கள் மென்மேலும் பல சாதனை புரிய இந்த நன்னாளில் அனைவரும் இணைந்து முயற்சிப்போம்.

* சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு வரவேண்டும்

அந்தமான் பகுதியில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து போலீஸ் வேலைக்கு எல்லாம் செல்ல வேண்டாம் என தனது உறவினர்கள் முதல் பலரும் கூறினாலும், 1997ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு வந்து, இன்று சேலம் மாநகரில் டி.ஐ.ஜி ஆக உள்ள ராஜேஸ்வரி ஐபிஎஸ் கூறுகையில், ‘‘தற்போது வரை பெண்கள் மற்றவர்கள் கூறும் வேலைகளை செய்யும் நிலையிலேயே உள்ளனர்.

முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இன்னும் பெண்கள் முழுமையாக வரவில்லை. பெண்கள் பல துறைகளில் பணிபுரிவதாக கூறினாலும், முக்கிய முடிவுகள் எடுக்கும் இடத்தில் இன்னும் வரவில்லை. எப்போது பெண்கள் முடிவெடுக்கும் இடத்திற்கு வருகிறார்களோ அன்றுதான் உண்மையான மகளிர் தினம். படிப்பு மட்டுமே தங்களை உயர்த்தும் என உறுதியாக இருக்க வேண்டும்,’’ என்றார்.

* நேரம் ஒதுக்க வேண்டும்

வடசென்னை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் கண்காணிப்பாளர் சாந்தி இளங்கோ கூறுகையில், ‘‘பெண்கள் தங்களைப் பார்த்துக் கொள்வதில் அக்கறை காட்டுவது கிடையாது. குறிப்பாக ஒவ்வொரு தாய்மார்களும் குழந்தைகள், கணவனுக்கு என்ன தேவை என்பதை பூர்த்தி செய்கின்றனர்.

ஆனால் தங்களது உடல் எவ்வாறு உள்ளது என்பதை கவனிக்க மறந்து விடுகின்றனர். ஒரு குடும்பத்தில் பெண் நன்றாக இருந்தால்தான் மற்றவர்களை நல்ல முறையில் காப்பாற்றமுடியும். எனவே பெண்கள் தங்களது உடலை பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். நாம் நமது சம உரிமையை நோக்கி சென்று கொண்டிருக்க வேண்டும். அதில்தான் பெண்களின் வெற்றி உள்ளது,’’ என்றார்.

Related Stories: