சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 150 கன அடி நீர் திறப்பு

திருவள்ளூர்: சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்கள் ஆகும். பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில், கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர், தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்புவது வழக்கம். இந்நிலையில், கோடை வெயில் தொடங்கி இருப்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. தற்போது 2,450 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. தற்பொழுது 2,957 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 185 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories: