வீரபத்ரர் கோயில் வனபூஜையை முன்னிட்டு 108 கிடா வெட்டி ‘கமகம’ கறி விருந்து-7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருப்புவனம் : திருப்புவனம் வீரபத்ரர் கோயில் வனபூஜையில் 108 கிடாக்களை வெட்டி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தேரடி வீதியில் வீரபத்ரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 6 வருடங்களுக்கு ஒருமுறை நள்ளிரவில் பச்சை குடில் வனபூஜை திருவிழா, 10 நாட்கள் வரை வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி நள்ளிரவில் பச்சை ஓலை ஊர்வலம் நடந்தது.

வைகை ஆற்றங்கரையில் தற்காலிக கூரை வேய்ந்த கோயிலில் அருள் பாலிக்கும் வீரபத்ரசாமிக்கு பழங்கள், தேஙகாய் உள்ளிட்டவை படைத்து பக்தர்கள் வழிபட்டனர். கிராமத்தினர் 108 கிடாய்களும் அரிசி மூடைகளும் காணிக்கையாக வழங்கினர். நேற்று முன்தினம் நள்ளிரவில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு விருந்து தயாரானது. நேற்று அதிகாலை ஒன்றரை மணிக்கு உச்சி கால பூஜை முடிந்த உடன் நான்கு ரத வீதிகளிலும் இருபுறமும் அமர்ந்திருந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் தமாகா கட்சி மாநில தொண்டரணித் தலைவர் அயோத்தி, பேருராட்சி கவுன்சிலர்கள் பாரத் ராஜா, வெங்கடேஸ்வரி குடும்பத்தினர் சார்பில் வீரபத்திரர் மூலவருக்கு வெள்ளிக்கிரீடம் காணிக்கை வழங்கப்பட்டது.

Related Stories: