நாகூர் பட்டினச்சேரியில் உடைந்த கச்சா எண்ணெய் குழாய் சீரமைப்பு: மீண்டும் கசிவால் மீனவர்கள் அச்சம்

நாகப்பட்டினம்: நாகூர் பட்டினச்சேரியில் உடைந்த கச்சா எண்ணெய் குழாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மீண்டும் கசிவால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் (சிபிசிஎல்) சார்பில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 2ம்தேதி நள்ளிரவு கச்சா எண்ணெய் வெளியேற தொடங்கியது. இது நாகூர் பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி கடற்பகுதி வரையிலும் கலந்தது. கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை நவீன இயந்திரம் மூலம் உறிஞ்சி எடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது.

இந்நிலையில் நேற்று மீனவ கிராம மக்கள் முன்னிலையில் உயர் அழுத்தத்தில் எண்ணெய் செலுத்தி சிபிசிஎல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். உடைப்பு ஏற்பட்ட அந்த குழாயில் இருந்து மீண்டும் கசிவு ஏற்பட்டதால் அந்த இடத்தை அடைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த சப் கலெக்டர் பனோத் ம்ருகேத்லால், தாசில்தார் ராஜசேகரன், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த மீனவ கிராம மக்கள், இதே நிலை நீடித்தால் கச்சா எண்ணெய் அதிக அளவில் கடலில் கலந்து கடல் வாழ் உயிரினங்கள் இறந்து விடும்.

மீன்கள் வாங்க வியாபாரிகள் அச்சப்படும் நிலை ஏற்படும் என்றனர். இதுகுறித்து சிபிசிஎல் முதன்மை பொதுமேலாளர் ஆனந்த் கூறுகையில், நாகூர் பட்டினச்சேரி வழியாக செல்லும் குழாய்க்கு மாற்று ஏற்படாக வேறு பாதையில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணி நிறைவு பெற 3 ஆண்டுகள் ஆகும். அந்த பணி நிறைவு பெற்றவுடன் நாகூர் பட்டினச்சேரி வழியாக பயன்பாட்டில் உள்ள குழாய் அகற்றப்படும் என்றார்.

Related Stories: