ரூ.18.43 கோடியில் 2 ஏக்கரில் அமைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர்: தொல்பொருட்களை பார்வையிட்டு செல்பி எடுத்து உற்சாகம்

திருப்புவனம்: கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி செலவில் செட்டிநாட்டு கலைவண்ணத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் கீழடி அகழாய்வுத்தளத்தில் 2018 முதல் தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக 2014 முதல் ஒன்றிய அரசின் 3 கட்ட ஆய்வும் நடத்தப்பட்டது.  8 கட்ட ஆய்வுகளில் தங்க காதணி, சுடுமண் முத்திரை, திமில் உள்ள காளையின் 70 செ.மீ நீளமுள்ள முதுகெலும்பு, உலைகலன், சூதுபவளம், சுடுமண் பானைகள், தலையலங்காரத்துடன் கூடிய பொம்மை, மீன் உருவம் பதித்த பானை ஓடு மற்றும் உறைகிணறு உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.

ஒன்றிய அரசின் தொல்லியல் துறை சார்பில் முதல் மூன்று கட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்காக மைசூரூக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடந்த ஐந்து கட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை கீழடியிலேயே வைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று கீழடியில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.18.43 கோடி செலவில் செட்டிநாட்டு கலைவண்ணத்தில் உலகத்தரத்துடன் கீழடி அருங்காட்சியகம் கட்டப்பட்டது. இங்கு அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற பொருட்கள் நவீன விளக்குகள், ஒலி, ஒளி காட்சிகள், மினி தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கீழடி அருங்காட்சியகத்தில் மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர்மேலாண்மையும், கலம் செய்கோ, ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் 6 பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டிடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழரின் பண்பாட்டை உலகிற்கே பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த கீழடி அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். ஆறு பகுதிகளாக வைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை பார்வையிட்டார்.

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களில் குறிப்பிடத்தக்கவை அருங்காட்சியகத்தின் ஆறு பகுதியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை பார்வையிட்ட அவர் பொருட்களின் காலம், பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். பின்னர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். கீழடி அகழாய்வு பணி மாதிரி, நினைவுப்பரிசாக முதல்வருக்கு வழங்கப்பட்டது.

Related Stories: