மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

சென்னை: மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, மேகதாது அணை சிக்கல் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களின் அரசுகள் பேச்சு நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு பேச்சு நடத்தினால் மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண முடியும் என்றும் ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா கூறியிருக்கிறார். மேகதாது அணை சிக்கலில் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய ஒன்றிய அமைச்சர் கர்நாடகத்தின் குரலாக ஒலித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஏதேனும் ஒரு சிக்கல் குறித்து பேச்சு நடத்தினால் தீர்வு ஏற்படும், அது இரு தரப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றால் அது குறித்து பேச்சு நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

தீர்க்க முடியாத சிக்கல்களைக் கூட பேசித் தீர்க்க முடியும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. ஆனால், மேகதாது அணை சிக்கல் அப்படிப்பட்டதல்ல. காவிரி ஆற்று நீர் சிக்கலில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தண்ணீரையும் பறிக்கும் நோக்கத்துடன் கர்நாடக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் தான் மேகதாது அணை திட்டம் ஆகும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் அது குறித்து தமிழக அரசு எவ்வாறு பேச்சு நடத்த முடியும்? அவ்வாறு பேச்சு நடத்த ஒப்புக்கொள்வதே தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்ப்பதாகத் தான் அமையும்.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும். எனவே, மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் வி.சோமண்ணா கர்நாடகத்தை சேர்ந்தவர். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போதே மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர். மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சராக கர்நாடகத்தைச் சேர்ந்த சோமண்ணா நியமிக்கப்பட்டபோதே அதற்கு தமிழக உழவர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. மத்திய அமைச்சரான பிறகும் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியதன் மூலம் அமைச்சர் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். இனியாவது அவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக செயல்பட வேண்டும். மேகதாது அணை தொடர்பாக பேச்சு நடத்த ஒன்றிய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: