2 நாள் திருவிழா நிறைவு: கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் கூட்டு திருப்பலி

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று நடந்த கூட்டு திருப்பலி பூஜையில் இந்திய-இலங்கை பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இலங்கை, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு அந்தோணியார் தேர் பவனி நடந்தது.  அலங்கரிக்கப்பட்ட சிறிய சப்பரத்தில் அந்தோணியார் திருவுருவம் வைக்கப்பட்டு இரு நாட்டு பக்தர்களும் தோளில் சுமந்து வந்தனர். 2ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு பக்தர்கள் ஆலயத்தின் முன்பு கூடியதும் இறை பிரார்த்தனை பாடல்கள் துவங்கின.

காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலி பூஜை துவங்கியது. நாட்டில் கல்வி, கலையும் செழிக்கவும், செல்வமும் தொழிலும் பெருகவும், ஆன்மிகமும் அன்பும் நிலைத்து மக்கள் வாழ்ந்திட  இருநாட்டு பக்தர்களும் இணைந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இரு நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா திருப்பலி பூஜை, பிரார்த்தனையை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டது. பின்னர் இந்திய - இலங்கை பக்தர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டு, தங்களது படகுகளில் அவரவர் நாடுகளுக்கு புறப்பட்டனர்.

காலை 9 மணிக்கு மேல் தமிழகத்தில் இருந்து சென்றிருந்த பக்தர்கள் தனித்தனி குழுக்களாக கச்சத்தீவில் இருந்து கிளம்பினர். நண்பகல் 12 மணி முதல் ராமேஸ்வரம் துறைமுகத்தை படகுகள் வந்தடைந்தன.

Related Stories: