கைதான டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா காவல் 2 நாள் நீட்டிப்பு: சிபிஐ சித்ரவதை செய்வதாக புகார்

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதில் துணை முதல்வராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறையும், சிபிஐயும் விசாரணை நடத்தியது.

அதன் அடிப்படையில் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கடந்த பிப்ரவரி 26ம் தேதி அவரை கைது செய்து, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சிபிஐ கோரியபடி சிசோடியாவை மார்ச் 4 வரை 5 நாட்களுக்கு சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, கைது நடவடிக்கையை தொடர்ந்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, “விசாரணை என்ற பெயரில் என்னிடம் நீண்ட நேரம், கேட்ட கேள்விகளையே திரும்ப, திரும்ப கேட்டு சிபிஐ அதிகாரிகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர்’’ என சிசோடியா குற்றம்சாட்டினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சிசோடியாவிடம் கேட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்கக் கூடாது என சிபிஐக்கு உத்தரவிட்டு, சிசோடியாவின் காவலை மேலும் 2 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டனர்.  முன்னதாக ஜாமீன் கேட்டு சிசோடியா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: