பழங்கால தமிழர்களின் பாரம்பரிய பொக்கிஷம் கீழடி அருங்காட்சியகம்; செட்டிநாட்டு கலையில் மிளிரும் தொல்லியல் அதிசயம்: ஆச்சரியப்பட வைக்கும் மூதாதையர் உலகம்

சங்க கால தமிழ் இலக்கியங்கள் படித்திருப்போம். தமிழர்களின் வாழ்வியல், பழக்க வழக்கங்கள்,  வசிப்பிடம், வணிகம், வீரம், காதல், திருமணம், இறப்பு - இப்படி எத்தனையோ தகவல்களை வெறும் பார்வையாளராக படித்து விட்டு நகர்ந்திருப்போம். ஆனால், அதற்கான சான்றுகள் பூமிக்கடியில் புதைந்து கிடக்கிறது. இன்றைய நாகரீக வாழ்வின் அச்சாரம், சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆதி தமிழன் வாழ்க்கையே ஒரு அற்புதம். அழகியலோடு கட்டிடங்கள் கட்டி வாழ்ந்தான். தனியறைக்குள் கழிப்பறை வசதிகளோடு கூட வாழ்ந்திருக்கிறான் என்ற கீழடியில் தோண்ட, தோண்ட கிடைத்த அடையாளங்கள், உலகத்தையே உலுக்கி போட்டது. அந்த இடம்தான் கீழடி. மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து 12வது கிலோ மீட்டரில், ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் கீழடி உள்ளது.

* முதல் கட்ட அகழாய்வு

2014ம் ஆண்டு பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய தொல்பொருள் அகழாய்வு மையத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் தொல்லியல் குழுவினர், மூல வைகையாற்று பகுதியான தேனி மாவட்டம், வருசநாடு தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள 293 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, சிவகங்கை மாவட்டம், கீழடி பள்ளிச்சந்தை புதூர் திடலில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பழங்கால பொருட்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து கீழடியில் அகழாய்வு பணிகளை தொடங்கினால், பழங்கால தமிழர்களின் வாழ்வியல் ஆதாரங்களை கண்டறியலாம் என எண்ணி, ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் முதலாம் கட்ட அகழாய்வுப்பணிகள் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கியது.

* கண்கவர் கட்டுமானம்

2016 வரை ஒன்றிய அரசு அகழாய்வு பணிகளை தொடர அனுமதித்தது. இந்த ஆய்வின்போது சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் கட்டிட கட்டுமானங்கள், சாயப்பட்டறை, செங்கல் உள்ளிட்டவை கிடைத்தன. இதன்மூலம் நாகரீக மனித வாழ்வின் முன்னோடியே தமிழர்கள் தான் என உலகமெங்கும் அறியப்பட்டது. தொடர்ந்து கிடைத்த அகழாய்வு சுடுமண் பொருட்கள், இரும்பு, தங்கம் உள்ளிட்ட பொருட்கள் மூலம், அந்த காலத்திலேயே தமிழர்கள் அணிகலன்கள் அணிந்து, அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நிரூபணமானது. இதையடுத்து ஒன்றிய பாஜ அரசு, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அதிரடியாக இடமாற்றம் செய்தது.

* தமிழ்நாடு அரசு நிதியில்....

ஒன்றிய அரசின் 3 அகழாய்வுகளுக்கு பின் 2017ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசு தனியாக நிதி ஒதுக்கி, அகழாய்வு பணிகளை மேற்கொண்டது. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு தொடர்ந்தது. இதில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. கடைசியாக நடந்த 8ம் கட்ட அகழாய்வு பணிகள், கடந்த 2022, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. விரைவில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளன. அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த எண்ணிய தமிழ்நாடு அரசு, அதற்காக கீழடி அரசு பள்ளி அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.81 கோடி செலவில் அருங்காட்சியகத்தை கட்டி முடித்துள்ளது.

* திரையரங்குடன் 10 கட்டிடம்

செட்டிநாடு கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளள அருங்காட்சியகத்தில் மொத்தம் 10 கட்டிட தொகுதிகள் உள்ளன. வரவேற்பறை, 54 இருக்கைகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட மினி திரையரங்கம், ஓய்வறை, பொருட்களை காட்சிப்படுத்த தனி 6 கட்டிட தொகுதிகள் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன.  வரவேற்பறையை ஒட்டி தமிழ்நாட்டில் அகழாய்வு நடந்த கீழடி, சிவகளை, கொற்கை, அரிட்டாபட்டி உள்ளிட்ட 21 இடங்கள் பற்றிய பிரமாண்ட சைஸ் வரைபடம் நம்மை வரவேற்கிறது. இதில் அந்தந்த அகழாய்வு தளங்கள் பற்றிய படங்கள், தளங்களுக்கு செல்லும் வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* தமிழில் பெயர்கள்

அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை மையப்படுத்தியே கட்டிட தொகுதிகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. வைகை நதி கரையோரம் நடந்த அகழாய்வு என்பதால் கடல்சார் வணிகம் மூலம் சூதுபவளம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. அந்த கட்டிட தொகுதிக்கு  கடல் வழி வணிகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மண்பாண்ட பொருட்கள் பற்றிய கட்டிட தொகுதிக்கு ‘கலம் செய் கோ’ என பாரம்பரிய தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. வைகையும்  நீரும், ஆடையும் அணிகலன்களும், வாழ்வும் வளமும், நிலமும் நீரும்,  என மொத்தம் ஆறு கட்டிட தொகுதிகள் இரண்டிரண்டு தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளங்களிலும் அந்தந்த பொருட்கள் தொடர்புடைய புடைப்புச் சிற்பங்கள் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அகழாய்வு குறித்த மினியேச்சர் சிற்பங்களும் ஒவ்வொரு கட்டிட தொகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.

* டிவியிலும் கண்டுகளிக்கலாம்

ஒவ்வொரு கட்டிட தொகுதியிலும் 65 இஞ்ச் மெகா சைஸ் கலர் எல்இடி டிவிக்கள் கட்டிட தொகுதிகளுக்கு ஏற்ப 2 முதல் 4 டிவிக்கள் வரை பொருத்தப்பட்டுள்ளன. இந்த டிவிக்களில் அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரங்களில் அகழாய்வு பணிகள், அதில் எடுக்கப்பட்ட பொருட்கள், பயன்பாடு, அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் பேச்சு ஆகியவை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் ஒளிபரப்பப்பட உள்ளன.

* இயற்கை செயற்கையாய்

அருங்காட்சியக வளாகத்தில் அகழாய்வு தளங்களை கண்டிராத சுற்றுலாப்பயணிகளுக்காக செயற்கையாக அகழாய்வு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றிய அரசின் முதலாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட மெகா செங்கல் கட்டுமானம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சாய பட்டறை போன்ற செங்கல் கட்டுமானத்தின் தரைத்தளம் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் 5 மற்றும் 6ம் கட்ட அகழாய்வு தளமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

* திண்ணையும்... நவீனமும்....

ஒவ்வொரு கட்டிட தொகுதிகளிலும் சுற்றுலாப்பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிட நவீன ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பிற்காக அனைத்து  கட்டிடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அனைத்து திசைகளிலும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிட தொகுதிகள் அனைத்தும் செட்டிநாட்டு கட்டிட கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் கட்டிட தொகுதிகளுக்கு மேலே செல்ல சுழலும் இரும்பு படிக்கட்டுகள் கலைநயத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. பண்டைய காலத்து வீடுகளில் திண்ணைகள் வைத்தும் தரைத்தளத்தில் குளிர்ச்சிக்காக வண்ணம் பூசியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டிட தொகுதிகளின் வெளிப்புறங்களின் இருபுறமும் திண்ணைகள் வைத்து கட்டப்பட்டுள்ளன.

* மாடங்களுடன் தெப்பக்குளம்

தூண்கள் அனைத்தும் மரங்களால் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகள் ஓய்வெடுக்க மார்பிள் கற்களால் ஆன இருக்கைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. நான்கு மாடங்களுடன் கூடிய நீர் நிரம்பிய தெப்பக்குளமும் அமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மெகா கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஆறு கட்டிட தொகுதிகளிலும் நவீன விளக்குகள் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப 360 டிகிரிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன. தங்கம், தந்த சீப்பு, ஆட்டகாய்கள், கெண்டி மூக்கு பானை, மூடியுடன் கூடிய சிவப்பு நிற பானை, சாம்பல் நிற பானை, மெகா சைஸ் சிவப்பு நிற பானை உள்ளிட்டவைகள் கண்ணாடி கூண்டினுள் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

* மழை நீர் சேகரிப்பு

கொந்தகை தளத்தில் தாழிகளினுள் வெளிநாட்டு பாணியிலான குடுவை வடிவ கிண்ணம், இரு வண்ண கிண்ணம், கத்தி, செறிவூட்டப்பட்ட அரிசி உள்ளிட்டவைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கட்டிட தொகுதிகளிலும் தாழ்வாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. கூரைகளில் விழும் மழை நீர் தாழ்வாரத்தில் விழுந்து அப்படியே குழாய் மூலம் கட்டிடங்களின் வெளியே உள்ள மழை நீர் சேகரிப்பு குளத்தில் விழும்படி கட்டிட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் நமது மண்ணின் பாரம்பரியம் கலந்து கட்டப்பட்டுள்ள சிறப்புமிக்க கீழடி அருங்காட்சியகம் இன்றுமுதல் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தை நாளை மாலை திறந்து வைக்க உள்ளார். வாருங்கள்... பழங்கால தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றற கலப்போம்...! கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

* கீழடியை தொடர்ந்து 3 தளங்களில் ஆய்வு

கீழடியை தொடர்ந்து அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய தளங்களிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. கொந்தகையில் பண்டைய காலத்தில் மூன்று விதங்களில் இறந்தவர்களை புதைப்பது  கண்டறியப்பட்டது. பராமரிக்க முடியாத முதியவர்களை உயிருடன் உணவு, தண்ணீர் வைத்து மிகப்பெரிய தாழியினுள் வைத்து அப்படியே புதைப்பது, இறந்தவர்களை  அவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களுடன் புதைப்பது, வேறு இடத்தில் இறந்தவர்களை எடுத்து வந்து தாழியினுள் வைத்து புதைப்பது என மூன்று நிலைகள் கண்டறியப்பட்டன. இந்த மூன்று நிலை தாழிகளும் அருங்காட்சியகத்தில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அடி உயரம் முதல் ஐந்தரை அடி உயரம் வரை உள்ள தாழிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* 2,500 ஆண்டுகளுக்கு முன்பே...

கீழடியில் 2014ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வுப்பணிகள் தொடங்கப்பட்டது. முதல் 2 கட்ட அகழாய்விலேயே சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான வீடுகள், மண், நெசவு  தொழில் செய்ததற்கான பழங்கால செங்கல் கட்டுமானத்திலான தொழிற்சாலை, குடிநீர் வருவதற்கான மண் குழாய்கள், கழிவுநீர் செல்ல தனி குழாய் என அன்றே நம் மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றுடன் மண்பாண்ட ஓடுகள், மண்ணால் சுடப்பட்ட மணிகள், மண் அடுக்குகள், முத்து மணிகள், கல் மணிகள், பானைக்குறியீடுகள், கண்ணாடி மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட  ஓடுகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டை, சதுரங்க காய்கள், கலை நயமிக்க பானைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்தன.

Related Stories: