‘லயன்’ உறுமலில் மீண்டும் சுருண்டது இந்தியா: வெற்றி முகத்தில் ஆஸி

இந்தூர்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடக்கிறது. முதலில் களம் கண்ட இந்தியா முதல் இன்னிங்சில் 109ரன்னில் சரண்டரானது. அதனையடுத்து களமிறங்கிய ஆஸி அணி,  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 54ஓவரில் 4விக்கெட் இழப்புக்கு 156ரன் எடுத்தது. இந்நிலையில் 47ரன் முன்னிலையுடன் களத்தில் இருந்த ஹாண்ட்ஸ்கோம்ப் 7, கேமரான் 6ரன்னுடன் நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். மிக மிக தாமதமாக வாய்ப்புக் கிடைத்த சுழல் அஷ்வின், வேகம் உமேஷ் ஆகியோர் நேற்று விக்கெட் அறுவடையை ஆரம்பித்தனர். எனவே ஆஸி 11 ரன் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்தது.

அதனால் ஆஸி முதல் இன்னிங்சில் 76.3ஓவரில் 197ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிபட்சமாக கவாஜா 60, லபுஷேன் 31ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜடேஜா 4, அஷ்வின், உமேஷ் தலா 3 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 88ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை நேற்று தொடங்கியது. உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியதும், கில்லை 5 ரன்னில் நாதன் லயன் போல்டாக்கினார். அதன் பிறகு லயன் ‘உறுமல்’ அதிகரித்தது. எனவே ரோகித் 12, கோஹ்லி 13, ஜடேஜா 7, ஸ்ரீகர் 3 என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். மறுமுனையில் புஜாரா பொறுப்புடன் விளையாட, அவருடன் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த  ஸ்ரேயாஸ் 26, அஷ்வின் 16ரன்னில் ஆட்டமிழந்தனர்.

அரைசதம் விளாசிய புஜாரா 8 வது விக்கெட்டாக 59ரன்னில் ஆட்டமிழக்க ‘‘முடிவு’’ கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. அதற்கு ஏற்ப உமேஷ், சிராஜ் இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்தியா 2வது இன்னிங்சில் 60.3 ஓவருக்கு 163ரன்னில் மீண்டும் சுருண்டது. அக்சர் 15ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்தியா வீரர்களை அலற விட்ட லயன் 64ரன்னை விட்டு தந்து  8 விக்கெட்களை அள்ளினார். கூடவே ஸ்டார்க், குனேமன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தியா 2வது இன்னிங்ஸ் மூலம் 75ரன் மட்டுமே முன்னிலைப் பெற்றது. அதனால் 76ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி உற்சாகமாக 3வது நாளான இன்று களம் காண உள்ளது.

* மீண்டும் லயன்

டெஸ்ட் ஆட்டங்களில் 13வது முறையோக லயன் பந்து வீச்சில் புஜாரா விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதேபோல் ரகானே 10 முறையும், ரோகித் 8முறையும், கோஹ்லி 7 முறையும் விக்கெட்டை லயனிடம் இழந்துள்ளனர்.

* 200க்கு வாய்ப்பில்லை

முடிந்த 3 இன்னிங்சிலும் எந்த அணியும் 200 ரன்னை தாண்டவில்லை. இன்று நடைபெற உள்ள 4வது இன்னிங்சிலும் வெற்றி இலக்கு 76 ரன் என்பதால், அதிலும் 200 ரன்னை தொட வாய்ப்பில்லை.

* எட்டு.... எட்டா...

இந்திய மண்ணில் நாதன் லயன்(35) 2வது முறையாக 8 விக்கெட்டை அள்ளியுள்ளார். இதற்கு முன்பு பெங்களூரில்(2016) நடந்த டெஸ்ட்டில் 8 விக்கெட்களை வாரியுள்ளார். தெ.ஆப்ரிக்க வீரர் குளூஸ்னர்(கொல்கத்தா, 1996) 8 விக்கெட்களை சுருட்டியுள்ளார். ஆனால் அதிகபட்சமாக நியூசி வீரர் அஜாஸ் படேல்(மும்பை,2022) 10 விக்கெட்களையும் வாரி சுருட்டியதே அதிக பட்ச சாதனை.

Related Stories: