தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி குழு நியமிக்கும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி:  தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை இனிமேல் பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் அடங்கிய கொண்ட குழு தான் நியமனம் செய்யும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் நாராயணன் உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில், ”இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.இந்த வழக்குகளை முன்னதாக உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு வாரம் தொடர்ந்து விசாரணை நடத்தியது.

இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதத்தில், ”தேர்தல் ஆணையர்களுக்கான பதவி நியாயமான சட்டத்தின் படி ஆறு ஆண்டுகள் என்று இருக்கிறது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய நபரை ஒன்றிய அரசு வேண்டும் என்றே தேர்ந்தெடுப்பது ஏன்? இதனால் தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இயங்குவதை எப்படி உறுதி செய்ய முடியும். தன்னிச்சையாக இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி தெளிவாக தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆறு ஆண்டுகள் பதவி காலம் என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.இதற்கு ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் பதிலளித்து கூறிய போது, ” தேர்தல் ஆணையர்கள் எந்த ஆண்டு முதல் அதிகாரி, அவர்களது பிறந்த தேதி, குறிப்பிட்ட பிரிவில் அவர்கள் எவ்வளவு சீனியர் என்பது, அவர்களது சர்வீஸ் உள்ளிட்டவை முக்கியமான விஷயம் கருத்தில் கொண்டு தான் நியமிக்கப்படுகிறார்கள். அதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்து ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.அதில் ‘‘தேர்தல் ஆணையர் நியமனங்கள் தொடர்பான விவகாரம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஜனநாயகம் என்பது மக்களின் சக்தியுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டின் வலிமை மிக உயர்ந்தது. ஜனநாயகத்தை ஆளும் கட்சிகள் எழுத்திலும் உணர்விலும் நிலைநிறுத்த முயற்சிக்கும் போது தான் ஜனநாயகத்தை அடைய முடியும். மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துவதற்கான கடமை மற்றும் அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டிருப்பதை நீதிமன்றம் உணருகிறது. அவர்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் செயல்படுவது முக்கிய கடமையாகும். இத்தகைய நியமனத்தின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் அது நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அரசியல் கட்சிகள் மற்றும் அதன் வேட்பாளர்களின் தலைவிதி தேர்தல் ஆணையத்தின் கையில் தான் உள்ளது. அதனால் சட்டப்படி தேர்தல் ஆணையம் இயங்க வேண்டும்.

மேலும், ஜனநாயகத்தில் தேர்தலின் புனிததன்மை என்பது பேணி காக்கப்பட வேண்டும். இல்லையெனில் அது பேரழிவை ஏற்படுத்தி கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த விவகாரத்தில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் மட்டுமே ஜனநாயகம் வெற்றிப்பெற முடியும். ஊடகங்கள் மற்றும் பிற விஷயங்களால் தேர்தல் இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சட்டத்தின் ஆட்சி என்பது ஜனநாயக ஆட்சியின் அடிப்படை அடித்தளமாகும். சட்டத்தின் ஆட்சிக்கு உத்தரவாதம் அளிக்காத தேர்தல் ஆணையம், ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும். குறிப்பாக தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருந்து நியாயமான முறையில் செயல்பட வேண்டும். அரசுக்குக் கடமைப்பட்ட ஒருவரால் சுதந்திரமான மனநிலையைக் கொண்டிருக்க முடியாது. மேலும் சுதந்திரமான நபர் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடிமையாக இருக்க மாட்டார். இது நிதர்சனமான உன்மையாகும்.அதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் இதுவரை நேரடியான முறையில் தான் நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் அவர்களை இந்திய பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று அடங்கிய குழு மட்டுமே தேர்ந்தெடுக்கும். இவர்களது ஆலோசனையின் படி குடியரசுத் தலைவரால் தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் இந்த குழுவின் உத்தரவின் படி தான் அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். இந்த உத்தரவு என்பது, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படும் வரை இந்த  உத்தரவு தொடரும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு நிதியுதவி மற்றும் தனிச் செயலகம் தேவை என்பது தொடர்பாக மாற்றத்தை செய்யுமாறு ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: