மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பீட்டில் பே வார்டுகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் பன்னோக்கு மருத்துவமனையில் 16 கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகள் கொண்ட பே வார்டை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி இன்று திறந்து வைத்தனர். அதன்பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்டமைப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டணப் படுக்கை வசதி கொண்ட அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தவும், இதனை அனைத்து தரப்பு மக்கள் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் கடந்த நிதிநிலை அறிவிப்பின்போது மதுரை, கோவை, சேலம் மருத்துவமனைகளில் கட்டண மருத்துவ தொகுதிகளை (பே வார்ட்ஸ்) அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.