அதிமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்க நடிகையும், கட்சி நிர்வாகியுமான கௌதமி வருகை!

 

சென்னை: அதிமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்க நடிகையும், கட்சி நிர்வாகியுமான கௌதமி வருகை தந்துள்ளார். விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேர்காணல் நடத்துகிறார். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

மேலும், சில கட்சிகள் இணையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் பணி அதிமுகவில் கடந்த டிசம்பர் 15ம் தேதி தொடங்கியது. 31ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டதில், மொத்தம் 10 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 2187 மனுக்கள் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 7,988 பேர் தாங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேர்காணல் நடைபெறுகிறது. முதல்நாளில் சேலம் மாநகர், புறநகர், ஈரோடு மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, நாமக்கல், திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, நீலகிரி ஆகிய கட்சி ரீதியான மாவட்டங்களுக்கு உள்பட்ட சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்க நடிகையும், கட்சி நிர்வாகியுமான நடிகை கவுதமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேர்காணல் நடத்துகிறார்.

 

Related Stories: