புதுக்கோட்டையில் சாலையில் கொட்டப்பட்ட காலாவதியான இருமல் மருந்து

*அப்புறப்படுத்த கோரிக்கை

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் சாலையில் கொட்டப்பட்ட காலவதியான இருமல் மருந்துகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை நகர்பகுதியில் அமைந்துள்ள நிஜாம் காலனி பிரதான சாலையில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் சாலை ஓரத்தில் வீடுகளில் இருந்து கொண்டுவரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் 500க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் சாலை ஓரமாக வீசி எறியப்பட்டு சிதறி கிடந்தன. அந்த பகுதியில் மாடுகள், நாய்கள் மற்றும் குரங்குகள் அப்பகுதியில் சுற்றி திரிகிறது. இந்நிலையில் சிதறிகிடந்த சில பாட்டில்களை குரங்குகள் தூக்கிக்கொண்டு சென்றது.

குரங்குகள் காலாவதியான இருமல் மருந்தை குடித்தாலோ அல்லது சிறுவர்கள் அந்த பகுதிக்கு செல்லும் போது விளையாட்டாக இருமல் மருந்தை டானிக் என்று அருந்துவதற்கு வாய்ப்புள்ளதால் உடனே காலாவதியான இருமல் மருந்து பாட்டில்களை அங்கிருந்து மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்.

சுகாதாரத்துறை இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த பகுதியில் அடிக்கடி ஊசி சிரிஞ்ச் மற்றும் டெஸ்ட் டியூபுகள் சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சியில் புகார் செய்தபோது நகராட்சி அதிகரிகள் வந்து அதை அப்புறப்படுத்தினர்.

Related Stories: