இரானி கோப்பை கிரிக்கெட் இதர இந்தியா ரன் குவிப்பு: ஜெய்ஸ்வால் 213, ஈஸ்வரன் 154

குவாலியர்: ரஞ்சி சாம்பியன் (2021-22) மத்திய பிரதேசத்துக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில், இதர இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ரன் குவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையை வெல்லும் சாம்பியன் அணியுடன், மற்ற மாநில வீரர்களை உள்ளடக்கிய இதர இந்தியா மோதும் இரானி கோப்பை நடைபெறும். கொரோனா காரணமாக 2020-21 சீசன் ரஞ்சி கோப்பை ரத்தானது. அதனால் இரானி கோப்பை போட்டியும் நடத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு 2019-20ல் சாம்பியனான சவுராஷ்டிரா அணியுடன் இதர இந்தியா மோதியது.  தொடர்ந்து இந்த ஆண்டு சவுராஷ்டிரா சாம்பியன் என்றாலும் 2021-22ல் ரஞ்சி சாம்பியன் ஆன மத்திய பிரதேசத்துடன், இதர இந்தியா இம்முறை மோதுகிறது. குவாலியர், கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இதர இந்தியா முதலில் பேட் செய்தது. கேப்டன் மயாங்க் அகர்வால் 2 ரன் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் வேகத்தில் வெளியேறினார். அதன் பிறகு அபிமன்யு ஈஸ்வரன் - யாஷஸ்வி ஜெய்ஸ்வால்  இணை மத்திய பிரதேச பந்துவீச்சை  பதம் பார்க்க, இதர இந்தியா ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர்.

ஈஸ்வரன் 135 பந்தில் சதம் விளாச, ஜெய்ஸ்வால்   158 பந்தில் சதம் அடித்தார். அதன் பிறகு ஈஸ்வரன் அடக்கி வாசிக்க, அதிரடியில் இறங்கிய ஜெய்ஸ்வால் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளி இரட்டை சதம் அடித்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 371 ரன் குவித்தனர். ஜெய்ஸ்வால்  213 ரன் (259 பந்து, 30 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆவேஷ் வீசிய 85வது ஓவரின் 4வது பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த பந்திலேயே, அபிமன்யு (154 ரன், 240 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் அவுட்டாகி வெளியேறினார். முதல் நாள் முடிவில் இதர இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு  381ரன் குவித்துள்ளது (87ஓவர்). இந்திரஜித் (3), சவுரவ் குமார் (0) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

* மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் முதல் சீசனில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தை இந்திய சுழல் அஷ்வின் கைப்பற்றியுள்ளார்.

* பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் பிஸ்மா மரூப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

* நடப்பு டெஸ்ட் தொடரில், இந்திய அணி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி விக்கெட்டை ஆஸி. ஸ்பின்னர் மர்பி 3வது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார்.

* இந்தியா நேற்று 109 ரன்னுக்கு சுருண்டது, ஆஸி.க்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்டில் எடுத்த 4வது குறைந்த பட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக மும்பையில் 104 ரன் (2004), புனேயில் 105 மற்றும் 107 ரன்னுக்கு (2017) இந்தியா ஆல் அவுட்டாகி உள்ளது.

Related Stories: