உலக டெய்லர் தினத்தை ஒட்டி டெய்லர் தொழிலாளர் சங்கத்தினர் பைக் பேரணி-சித்தூர் மாநகரம் முழுவதும் நடந்தது

சித்தூர் :  உலக டெய்லர் தினத்தை ஒட்டி நேற்று டெய்லர் தொழிலாளர் சங்கத்தினர் சித்தூர் மாநகரம் முழுவதும் பைக் பேரணி நடத்தினர்.உலக டெய்லர் தினத்தை முன்னிட்டு சித்தூர் மாவட்ட டெய்லர் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று சித்தூரில் உள்ள  மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து அங்கிருந்து சித்தூர் மாநகரம் முழுவதும் முக்கிய வீதிகளின் வழியாக பைக் பேரணியில் ஈடுபட்டனர். பின்னர் சித்தூர் துர்கா நகர் காலனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சித்தூர் எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு கலந்து கொண்டு பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி உலக டெய்லர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிஸ் கோவே என்பவர் முதன் முதலில் தையல் இயந்திரம் கண்டுபிடித்தார். அவருடைய நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் உலக டெய்லர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெய்லர்கள இல்லையென்றால் மனிதர்கள் இல்லை. ஏனென்றால் டெய்லர் மனிதர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடைகளை வடிவமைத்து தைத்து வழங்குகிறார்கள்.

அதேபோல் சாமான்ய மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அவர் அவர்களின் தகுதிக்கு ஏற்ப ஆடைகளை வடிவமைத்து தைத்து வழங்குகிறார்கள். ஏராளமான பொதுமக்கள் தற்போது ரெடிமேட் ஆடைகளை பயன்படுத்துகிறார்கள். இதனால் டெய்லர்களின் வாழ்வாதாரம் வெகுவாக குறைந்து வருகிறது. ஆகவே அனைவரும் ரெடிமேட் ஆடைகளை வாங்குவதை குறைத்து டெய்லர்களிடம் துணிகளை தைத்து ஆடைகளை அணிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் அவர்களின் வாழ்வாதாரம் பெருகும். அதே போல் சித்தூர் மாவட்ட டெய்லர்கள் சங்கம் சார்பில் பவன் அமைக்க இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.

சித்தூர் மாநகரத்தில் மிக விரைவில் டெய்லர் பவன் அமைக்க இடத்தை தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன். அதே போல் முதல்வர் ஜெகன் மோகன் சுயத்தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பெருக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அவ்வாறு வருடா வருடம் டெய்லர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் நிதி உதவி வழங்கி வருகிறார். மேலும் டைலர்கள் ஏராளமானோர் எங்களின் தொழில் மேலோங்க வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

டைலர்களின் கோரிக்கையை மாநில முதல்வருக்கு எடுத்துரைத்து மிக விரைவில் வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஏராளமான டைலர்கள் அவர்களின் கடைகளுக்கு  மின்சாரம் 300 யூனிட் வரை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். இதையும் மாநில முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று மிக விரைவில் டெய்லர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஏராளமான டைலர்கள் சொந்த வீடுகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக புகார்கள் தெரிவித்தார்கள்.

ஆகவே சித்தூர் மாவட்ட டைலர் சங்கம் சார்பில் மனுக்கள் வழங்கினால் அவர்களுக்கு மிக விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும்.

 இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாநில முதல்வர் டெய்லர்களுக்கு வருடம் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ெஜகன்மோகன் உருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்தனர்.

இதில் மாநகராட்சி துணை மேயர் சந்திரசேகர், டைலர் சங்க மாவட்ட தலைவர் சந்திரா, செயலாளர் சந்திரமௌலி, பொருளாளர் சின்னம்மரெட்டி, நகர தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் சுப்ரமணிய ரெட்டி, செயலாளர் நாகேந்திரன் பிள்ளை உள்பட ஏராளமான டெய்லர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: