தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று பெங்களூரு-ஓசூர் மெட்ரோ சேவைக்கு பச்சைகொடி: திட்ட ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி

பெங்களூரு: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று பெங்களூரு பொம்மசந்திரா-ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளதுடன் ஆய்வு பணிகள் மேற்கொள்ளவும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்ட திட்டமான ஆர்.வி.சாலை-பொம்மசந்திரா (மஞ்சள் வழித்தடம்) ரயில் பாதை அமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பொம்மசந்திரா வரையில் உள்ள ரயில் சேவையை தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்தாண்டு கர்நாடக மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

 தமிழ்நாடு அரசின் கோரிக்கையை கடந்தாண்டு ஜூலை மாதம் கர்நாடக அரசு ஏற்றுகொண்டு அனுமதி வழங்கியது. இதனிடையில் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தரப்பிலும் பொம்மசந்திரா-ஓசூர் இடையில் ரயில் சேவை நீட்டிக்க அனுமதிகோரி ஒன்றிய அரசின் நகர வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்று கொண்டுள்ள ஒன்றிய அரசு பொம்மசந்திரா-ஓசூர் வரை 20.5 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளதுடன் இதை ஆய்வு செய்வதற்கான பொறியாளர் குழு அமைத்ததுடன் ரூ.75 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் வரும் 20.5 கி.மீ தூரத்தில் கர்நாடகாவில் 11.7 கி.மீ தமிழ்நாட்டில் 8.8 கி.மீ ரயில் சேவை அமைகிறது. இத்திட்டம் முழுமையாக செயல்படும் பட்சத்தில் தென்மாநிலங்களில் இரு மாநிலங்களை இணைக்கும் முதல் மெட்ரோ ரயில் திட்டமாக பொம்மசந்திரா-ஓசூர் திட்டம் அமையும்.

Related Stories: