பெண்கள் இன்னும் பலதுறைகளில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும் : கூடலூரில் ராகுல் காந்தி உரை!!

நீலகிரி : கூடலூரில் தனியார் பள்ளி பொன் விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், “மழையில் குழந்தைகளை உட்கார வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது தகவல்களின் காலம்; ஏராளமான தகவல்கள் எளிதில் கிடைக்கின்றன. தகவல்களை அறிவாக மாற்றும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்குவதே பள்ளிகளின் கடமை. தகவல்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டால் இந்த உலகமே மோசமானதாகி விடும். பள்ளி பருவத்தில் நான் மிகவும் குறும்புக்கார சிறுவனாக இருந்தேன். விடுதியில் தங்கி படித்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன். எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

ஆனால் மகிழ்ச்சியாக இல்லை என பெற்றோரிடம் கூறினேன். பெற்றோரை அடிக்கடி வர வைப்பதற்காக நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறினேன். நான் ஆசிரியர்களால் கையாள கடினமான மாணவனாகவே இருந்தேன். கல்வி என்பது மிகவும் மிகுந்த செலவாவதாக இருக்கக் கூடாது. கல்வி வழங்குவதில் அரசின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். உற்பத்தி, சிறு, குறு நிறுவனங்களில் அதிக வேலைகளை உருவாக்கும் நிலையை அடைய வேண்டும். நாட்டில் கல்வி முறை மட்டுமின்றி இந்தியாவில் பலவற்றையும் மாற்ற வேண்டியுள்ளது.

கல்விக்கு அப்பால் உற்பத்தி பற்றிய நமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள். பெண்கள் இன்னும் பலதுறைகளில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும். மக்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவது தான் எனது போராட்டம். 20 ஆண்டு பொதுவாழ்க்கையில் பணிவே தலைவர்களின் முக்கிய பண்பாக இருக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: