ராணுவ அதிகாரியுடன் தகாத உறவு: தமிழ்நாட்டு பெண் அசாமில் படுகொலை: 4 வயது பெண் குழந்தை மேற்குவங்கத்தில் மீட்பு

கவுகாத்தி: அசாமில் ராணுவ அதிகாரி ஒருவரால் தமிழ்நாட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அசாம் மாநிலம் தேஸ்பூர் 4வது கார்ப்ஸ் ராணுவ பிரிவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக (பிஆர்ஓ) பஞ்சாபை சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் அம்ரீந்தர் சிங் வாலியா என்பவர் பணியாற்றி வந்தார். இவரை சந்திப்பதற்காக டெல்லியில் இருந்து கடந்த 14ம் தேதி பந்தனா ஸ்ரீ (35) என்ற பெண் கவுகாத்தி வந்தார். இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி கம்ரூப் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையின் சாங்காரி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மூட்டை கட்டி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சோனிட்பூர் கூடுதல் எஸ்பி மதுரிமா தாஸ் கூறுகையில், ‘லெப்டினன்ட்  கர்னல் அம்ரீந்தர் சிங் வாலியாவுக்கும், சடலமாக மீட்கப்பட்ட பந்தனா ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

டெல்லியில் இருந்து கவுகாத்திக்கு வந்த பந்தனா ஸ்ரீக்கும், அம்ரீந்தர் சிங் வாலியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆவேசமடைந்த அம்ரீந்தர் சிங் வாலியா, தனது காதலி பந்தனா ஸ்ரீயை கொன்று சாங்சாரி பகுதியில் வீசி எறிந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையான பந்தனா ஸ்ரீயின் நான்கு வயது பெண் குழந்தையை கடந்த 24ம் தேதி மேற்குவங்க மாநிலம்  ஹவுராவில் மீட்டுள்ளோம். இவ்வழக்கை ராணுவ நீதிமன்றம் விசாரிக்காது. தற்போது அம்ரீந்தர் சிங் வாலியாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: