எதிராளியிடம் மண்டியிடுவது சாவர்க்கர் சித்தாந்தம் இது தேசியவாதமல்ல… கோழைத்தனம்: ராகுல் காந்தி விளாசல்

ராய்ப்பூர்: ‘நம்மை விட வலுவானவன் என்பதற்காக எதிராளி முன் மண்டியிடுவது சாவர்க்கரின் சித்தாந்தம். இது தேசியவாதமல்ல, கோழைத்தனம்’ என காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு, சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நிறைவடைந்தது. இதில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது:

அதானிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்று நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டபோது, முழு உரையும் நீக்கப்பட்டது. அதானியின் உண்மை வெளிவரும் வரை நாடாளுமன்றத்தில் ஆயிரக்கணக்கான முறை கேள்வி கேட்போம், அதை நிறுத்த மாட்டோம்.

அதானியின் நிறுவனம் நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் பறித்து விட்டது. நாட்டையே பாதிக்கிறது. தேசத்தின் அனைத்து சொத்துக்களையும், துறைமுகம் உள்ளிட்டவற்றையும் அபகரித்துக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு எதிராக நாட்டின் சுதந்திரப் போர் நடக்கிறது. வரலாறு மீண்டும் திரும்புகிறது. இது நாட்டுக்கு எதிரான வேலை. அப்படி நடந்தால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் இதற்கு எதிராக நிற்கும்.

காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சத்தியாகிரகம் போராட்டம் நடத்தியவர்கள். பாஜவும், ஆர்எஸ்எஸ்காரர்களும் அதிகாரத்தை குறிவைப்பவர்கள். அவர்களின் அரசாங்க சிந்தனையைப் பற்றி ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் ஒருவர் (வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பெயரை ராகுல் குறிப்பிடவில்லை) அளித்த பேட்டியில், ‘‘சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட பெரியது. அதை எதிர்த்து எப்படி போராடுவது’’ என்றார்.

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அவர்களின் பொருளாதாரம் என்ன நம்மை விட குறைவாக இருந்ததா? அப்படியென்றால், வலிமையான யாரையும் எதிர்க்க மாட்டோம், பலவீனமானவர்களை மட்டுமே எதிர்ப்போம் என்று இது அர்த்தப்படுத்துகிறதா?

இது கோழைத்தனம். உங்களை விட வலிமையானவர் யாராவது இருந்தால் அவர்கள் முன் தலைவணங்குங்கள் என்பது சாவர்க்கரின் சித்தாந்தம். பெரிய பொருளாதாரம் கொண்டது என்பதற்காக சீனாவை எதிர்கொள்ள முடியாது என்பது தேசியவாதமா? இதுதானா தேசபக்தி? பலவீனமானவனை அடிப்பதும், வலிமையானவன் முன் தலைகுனிவதும் என்ன வகையான தேசபக்தி. இவ்வாறு ராகுல் பேசினார்.

சொந்த வீடு இல்லை

ராகுல் பேசுகையில், கடந்த 1977ம் ஆண்டு தனது குடும்பத்தினர் அரசு பங்களாவை விட்டு வெளியேறத் தயாரானபோது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.  ‘‘வீட்டில் ஒரு விசித்திரமான சூழல் இருந்தது. நான் அம்மாவிடம் சென்று என்ன நடந்தது என்று கேட்டேன், நாங்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறோம் என்று கூறினார். அது வரைக்கும் அது எங்கள் வீடு என்றே நினைத்திருந்தேன். எனது அம்மாதான் இது நம் வீடு இல்லை, அரசாங்கத்திடம் கொடுத்து விட்டு போக வேண்டும் என்று சொன்னார்கள். அடுத்து எங்கு செல்வீர்கள் என்று தனது தாய் சோனியாவிடம் கேட்ட போது, தெரியாது என்று அவர் பதில் சொன்னார். நான் திகைத்துப் போனேன். அன்று முதல், 52 ஆண்டுகளாக எங்களுக்கு இன்னும் குடும்ப வீடு எதுவும் இல்லை’’ என்றார்.

Related Stories: