லெக் ஸ்பின்னர் ஆஸ்டனை சேர்க்காதது ஆஸி.க்கு பின்னடைவு: ஹர்பஜன்சிங் சொல்கிறார்

மும்பை:இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கும் நிலையில் 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இந்தூரில் தீவிரப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் கிங் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

ஆஸ்திரேலியா அணி பார்ப்பதற்கு கொஞ்சம் காலியாக இருப்பது போல் தெரிகிறது. அவர்கள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆஸ்டன் ஏகாரை விடுவித்துவிட்டனர். என்னைப் பொறுத்தவரை அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விளையாடி இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிறந்த பந்துவீச்சாளராக செயல்பட்டு இருப்பார். ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்டில் இரண்டு ஆப் ஸ்பின்னர்கள் வைத்து விளையாடியது மிகப்பெரிய தவறு. ஏகார் ஒரு நல்ல திறமை வாய்ந்த வீரர். தற்போது இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நாம் சொந்த மைதானத்தில் உள்ள சாதகத்தை சிறப்பாக பயன்படுத்தி விளையாடி வருகிறோம். 3வது டெஸ்டிலும் இந்த முடிவு தான் வரும். ஏனெனில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா பலமாக விளங்குகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக தாய்நாடு திரும்பி வருகின்றனர். இந்த தொடர் நான்கிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முடியும் என அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டனர் என நினைக்கிறேன்.

ஆனால் ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தான் எதிர்கொள்ளப் போகிறோம். அவர்கள் இப்போதில் இருந்தே அதற்காக தயாராகி விட்டார்கள் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் விளையாடும்போது ஆஸ்திரேலிய அணி மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் எப்படி விளையாடுவார்களோ, அந்த வகையில் செயல்படுவார்கள். இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Related Stories: