வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா: 150 ஆடுகள், 300 சேவல்களை பலியிட்டு கமகமக்கும் பிரியாணி பிரசாதம்

மதுரை: கள்ளிக்குடி வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலின் பிரியாணி திருவிழாவையொட்டி, 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு, கமகம பிரியாணியை இரவு முழுவதும் தயாரித்து இன்று காலையில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கினர். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே, வடக்கம்பட்டி கிராமத்தில், முனியாண்டி சாமி கோயில் உள்ளது. இந்த சாமியின் பெயரில்தான் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு இடங்களில், மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் அமைந்துள்ளன. முழுஉருவத்துடன் இந்த கோயிலில் ஊருணிகரையில் நின்ற நிலையில் முனியாண்டி சாமி காட்சியளிப்பாா். ஆண்டுதோறும் இந்த கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பிரியாணி திருவிழா எனப்படும் பொங்கல் விழா.

ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றும் மாசி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் பிரியாணி திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று மாசி 2வது வெள்ளிக்கிழமையையொட்டி பாரம்பரியமான பிரியாணி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த ஒருவார காலமாக காப்புகட்டி விரதம் இருந்தனர். நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காலை திரண்டு பால்க்குடம் எடுத்து வந்தனர்.

வடக்கம்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வந்த இவர்கள் முனியாண்டி சாமிக்கு தாங்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அபிஷேகம் செய்தனர். மாலை 5 மணியளவில் நிலைமாலையுடன் கிராம பொதுமக்கள் திரண்டு தேங்காய், பழம், பூ அடங்கிய பூதட்டு ஊர்வலம் கிளம்பியது. இந்த ஊர்வலத்தின் முன்பு கிராமத்து இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகத்துடன் வந்தனர். பெண் பக்தர்கள் தங்களது வீடுகளிலிருந்து பூ தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். கிராமத்தினை அனைத்து பகுதியை சுற்றி வந்த நிலைமாலை ஊர்வலம் இரவு 8 மணிக்கு முனியாண்டி கோயிலை அடைந்தது.

அங்கு நிலைமாலையை சாமிக்கு சாற்றிய பின்பு பக்தர்கள் கொண்டு வந்த தேங்காயை உடைத்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் தங்களது ஓட்டல்களை இரண்டு நாள் மூடிவிட்டு இந்த பாரம்பரியமான திருவிழாவில் பங்கேற்றனர்.

150 ஆடுகள், 300 சேவல்கள்: திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் காணிக்கையாக 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சேவல்களை கோயிலுக்கு வழங்கினர். இவற்றை கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டது. முன்னதாக நள்ளிரவில் முதலில் சக்திக்கிடாய் பலியிடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய ஆடுகள் மற்றும் சேவல்கள் பலியிடப்பட்டு 2,500 கிலோ அரிசியில் அசைவ பிரியாணி தயாரிக்கும் பணிகள் விடிய விடிய நடைபெற்றது. காலை 5 மணியளவில் முனியாண்டி சாமி கோயிலில் உள்ள கருப்பசாமிக்கு படைக்கப்பட்டது. முனியாண்டி சாமிக்கு சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகாலையிலேயே கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி, டி.கல்லுப்பட்டி, சிவரக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அன்னதானமாக வழங்கப்பட்ட பிரியாணியை வாங்கி சென்றனர்.

சென்னை பூந்தமல்லியை சேர்ந்த ராமசாமி காந்திராஜன் கூறுகையில், ‘‘இந்தாண்டு பிரியாணி திருவிழாவில்  சிங்கப்பூர், மாலத்தீவு, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஓட்டல் நடத்துபவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மழை பொழியவும், மக்கள் நலன் பெறவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவை நடத்தி வருகிறோம். எங்கள் ஓட்டலின் தினசரி முதல்காணிக்கையை வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழாவிற்காக தனியாக எடுத்து வைப்பது வழக்கம். இந்த விழாவில் பிரசாதமாக பிரியாணி வழங்கப்படுவது சிறப்பு அம்சமாகும்’’ என்றார்.

Related Stories: