காலத்திற்கு ஏற்ற சீர்த்திருத்தம் இல்லாததால் சர்வதேச நிதி அமைப்புகள் மீது நம்பிக்கை சிதைந்து விட்டது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: சில வளரும் நாடுகள் தாங்க முடியாத கடன் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, சர்வதேச நிதி அமைப்புகள் மீதான நம்பிக்கை சிதைந்து விட்டதாகவும் கவலை தெரிவித்தார். இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்பின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2 நாள் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்து பேசியதாவது: நூற்றாண்டில் இல்லாத அளவுக்கான பெரும் தொற்றுநோயான கொரோனாவால் உலகம் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. பல நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகள் பின்விளைவுகளை இன்னமும் சமாளித்து வருகின்றன. ஸ்திரமற்ற நிதி நிலையால், தாங்க முடியாத கடன் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. சர்வதேச நிதி அமைப்புகள் மீதான நம்பிக்கை சிதைந்து விட்டது. இதற்கு காரணம், அவை தங்களைத் தானே சீர்த்திருத்திக் கொள்வதில் மிகவும் தாமதம் காட்டுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், உலகின் முன்னணி பொருளாதாரங்கள் மற்றும் நிதி அமைப்புகளின் பாதுகாவலர்களாகிய நீங்கள்தான், உலக பொருளாதாரத்திற்கு ஸ்திரத்தன்மை, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது எளிதான பணியல்ல. இருப்பினும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நிதி அமைப்புகளை வலுப்படுத்த நாடுகள் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் அரசியல் பதட்டங்களும் உருவாகி வருகின்றன. இதில், மிகவும் அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு நன்மை செய்வதில் ஜி20 நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், வளரும் நாடுகளின் கடன் பாதிப்புகள் குறித்து பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலக பொருளாதாரத்திற்கு முக்கியமானது என்றும், அதற்கு சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்து ஜி20 பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

* வேளாண் பட்ஜெட் 5 மடங்கு அதிகரிப்பு பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நன்மைகளை சம்மந்தப்பட்ட துறையினரிடம்  பிரதமர் மோடி எடுத்துரைத்து வருகிறார். அந்த வகையில் வேளாண் தொடர்பான வெபினார் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘கடந்த 2014க்கு முன் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.25,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவே 9 ஆண்டுகளில் தற்போது ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு பட்ஜெட்டில் 5 மடங்கு அதிக பட்ஜெட் வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.

Related Stories: