முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கபடி, தடகள போட்டியில் அரசு ஊழியர்கள் அசத்தல்-கல்லூரி மாணவர்களுக்கு நாளை கிரிக்கெட் போட்டி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளையொட்டி நேற்று அரசு ஊழியர்களுக்கான கபடி, தடகளம், இறகுபந்து மற்றும் வாலிபால் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவாரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ம் தேதி துவங்கியது. இதனையொட்டி விளையாட்டுப் போட்டிகளை கலெகடர் சாரு மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் துவக்கி வைத்தனர்.

மேலும் இந்த போட்டியானது பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடைபெற்று வருகிறது. அதன்படி முதலாவதாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி, கூடைப்பந்து, வளைகோல்பந்து மற்றும் மேசைப்பந்து, சிலம்பம், வாலிபால், கால்பந்து, தடகளம் மற்றும் நீச்சல், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப்போட்டிகள் நடதத்தப்பட்டுள்ளன.

இதேபோல் மாவட்ட அளவில் பொதுப்பிரிவினர் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கில் கபடி, கூடைப்பந்து, மேசைப்பந்து, சிலம்பம், நீச்சல் மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுப்போட்டிகளும் கடந்த 21ந் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட நிலையில் நேற்று முன்தினம் (22ம் தேதி) வளைகோல்பந்து, தடகளம் மற்றும் வாலிபால் ஆகிய விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றன. இந்நிலையில் மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் வயது வரம்பின்றி நேற்று நடைபெற்ற நிலையில் கபடி, தடகளம், இறகுபந்து மற்றும் வாலிபால் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதையடுத்து இதில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கு நாளை (25ம் தேதி) மற்றும் நாளை மறுதினம் (26ம் தேதி) மாவட்ட விளையாட்டரங்கம் மற்றும் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளும், 28ந் தேதி இறகுப்பந்து விளையாட்டுப்போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. இந்த விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் காலை 8 மணிக்கு துவக்கப்படும்.

மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்த வீரர், வீரங்கனைகள் அட்டவணையில் கண்டுள்ள தேதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவு செய்த நகல், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உறுதி சான்றிதழ் மற்றும் பொதுமக்கள் ஆதார் நகல் ஆகியவற்றுடன் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகலையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை சந்தித்து தங்கள் வருகையையும் பதிவு செய்திட வேண்டுமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

Related Stories: