லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணுக்கு டார்ச்சர்; காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா: குமரியில் பரபரப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே கேரளாவை சேர்ந்த இளம்பெண் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ரீனா (32). அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி 2 பேரும் நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்து உள்ளனர். இந்தநிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து உள்ளது. இதற்கிடையே சில மாதங்களாக வாலிபர், கஞ்சா போதைக்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது. இதனால் ரீனா குடும்பம் நடத்த முடியாமல் திணறி வந்துள்ளார். இதற்கிடையே வாலிபர் திடீரென்று ரீனாவை விட்டு விட்டு விலகி சென்று விட்டார். இதனால் ரீனா குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்தார்.

இது ஒருபுறம் இருக்க பளுகல் அருகே மேலிக்கோடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பிரவின்ராஜ் உடன் முகநூல் மூலம் ரீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி  3 வருடங்களுக்கு முன்பு ரீனாவை திருமணம் செய்து கொள்வதாக கூறிய பிரவின்ராஜ், ரீனாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்து உள்ளார். இதற்கு பிரவின்ராஜின் தாயார், சகோதரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதைத் தொடர்ந்து பிரவின்ராஜ் ரீனாவை பூவன்கோடு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து லிவ்-இன் உறவில் குடும்பம் நடத்தி வந்து உள்ளார். இதனால் ரீனா மீண்டும் கர்ப்பமானார். இதை அறிந்த பிரவின்ராஜின் நண்பர்கள் ரீனாவிடம், குழந்தையை கலைத்த பிறகு 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம் என்று நைசாக பேசி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்து உள்ளனர்.

பின்னர் தனது மகனுடன் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால், ரூ.10 லட்சம் வரதட்சணை வேண்டும் என்று பிரவின்ராஜின் தாயார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரீனா-பிரவின்ராஜ் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. நாட்கள் செல்லச் செல்ல பிரவின்ராஜ் பூவன்கோடு பகுதிக்கு வருவதை தவிர்த்தார். இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ரீனா அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையே தான் மீண்டும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். முறைப்படி திருமணம் நிகழாததால், போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து பிரவின்ராஜை திடீரென சந்தித்துள்ளார் ரீனா.

அப்போது எனது வாழ்க்கையை இப்படி சிதைத்துவிட்டு ஏன் சென்றாய்? என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரவின்ராஜ், ரீனாவை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். உடனே பளுகல் பகுதியில் உள்ள பிரவின்ராஜின் வீட்டிற்கு சென்று ரீனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தகவல் அறிந்ததும் பளுகல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து ரீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பிரவின்ராஜ், ரீனாவை திருமணம் செய்ய மறுத்து விட்டார். தொடர்ந்து 3 மணி நேரம் காதலன் வீட்டில் தர்ணாவில் ஈடுபட்ட ரீனாவை போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: