கல்லாறு பண்ணையில் விற்பனைக்கு 61 ஆயிரம் பழமரக்கன்றுகள் தயார்

ஊட்டி :  கல்லாறு பழப் பண்ணையில் 61 ஆயிரம் பழமரக்கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. மித வெப்ப சீதோஷ்ண நிலை கொண்ட இந்த பழப்பண்ணையில் பாக்கு, சில்வர் ஓக், காபி நாற்றுகள், மலேசியாவை தாயகமாகக் கொண்ட மங்குஸ்தான், துரியன் பழம், ரம்பூட்டான், இலவங்கம், எலுமிச்சை, நெல்லிக்காய், வெல்வட் ஆப்பிள், பலா, மலேயன் ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு வகையான பழ மரங்களும், கிராம்பு, மிளகு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய பயிர்களும் அலங்காரச் செடி வகைகளான குரோட்டன்ஸ், செம்பருத்தி, இக்சோரா, பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராம ரிக்கப்பட்டு வருகிறது. பழ பண்ணையில் தயாரிக்கப்படும் நாற்றுக்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கல்லாறு அரசு பழப்பண்ணையில் 61 ஆயிரம் நாற்றுக்கள் தயார் நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள், 37 ஆயிரம் மிளகு நாற்றுகள், 240 வாட்டர் ஆப்பிள் நாற்றுகள், 1400 கிராம்பு நாற்றுகள், 1900 அலங்கார செடிகள், பன்னீர் கொய்யா 2 ஆயிரம், மலேயன் ஆப்பிள் 1800, செர்ரி பழம் 1100, பலா 4 ஆயிரம், காபி 2 ஆயிரம் நாற்றுக்களும் என 61 ஆயிரம் நாற்றுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கல்லாறு பழப்பண்ணை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு வாங்கிச் செல்லலாம்.

Related Stories: