காயத்தால் விலகினார் வார்னர்: ஆஸி.க்கு மேலும் பின்னடைவு

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் டேவிட் வார்னர், இந்தியாவுடன் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸி. அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட், ஆல் ரவுண்டர் கேமரான் கிரீன், முன்னணி வேகம் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் முதல் 2 டெஸ்டில் களமிறங்க முடியவில்லை. இவர்களில், ஹேசல்வுட் ஏற்கனவே தொடரில் இருந்து விலகி தாயகம் திரும்புவது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், தொடக்க வீரர் வார்னரும் காயம் காரணமாக எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என ஆஸி. அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. 2வது டெஸ்டில் விளையாடியபோது, முகமது சிராஜ் வீசிய பந்து பலமாகத் தாக்கியதில் அவருக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இரண்டு ஓவர்களுக்குப் பிறகு பவுன்சராக அமைந்த ஒரு பந்து வார்னரின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. இதனால் மூளை அதிர்ச்சிக்கான அறிகுறிகளும் காணப்பட்டதால், 2வது இன்னிங்சில் அவர் களமிறங்கவில்லை.

மாற்று வீரராக ரென்ஷா சேர்க்கப்பட்டார். மூளை அதிர்ச்சி சரியாகிவிட்டாலும், முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது ஸ்கேன் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால் 3வது மற்றும் 4வது டெஸ்டில் இருந்து வார்னர் விலகியுள்ளார். அவர் உடனடியாக சிட்னி திரும்புகிறார். எனினும், ஒருநாள் தொடர்  தொடங்குவதற்கு முன்பு வார்னர் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அடுத்த 2 டெஸ்ட்களிலும் வார்னருக்கு பதில் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்குவார்’ என்று தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு காரணமாக கேப்டன்  பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியுள்ளார். அவர் 3வது டெஸ்ட்  தொடங்குவதற்கு முன்பு இந்தியா வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இப்படி அடுத்தடுத்த காயம்/விலகல்களால் ஆடிப்போயிருக்கும் ஆஸி. அணிக்கு கிரீன், ஸ்டார்க், ஸ்வெப்சன் ஆகியோர் மீண்டும் விளையாடுவதற்கு தயாராகி உள்ளது ஓரளவு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

Related Stories: