தா.பழூர் அருகே சோகம் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் தீயில் எரிந்து நாசம்-விவசாயி வேதனை

தா.பழூர் : தா.பழூர் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகள் தீயில் எரிந்து நாசமானதால் விவசாயி வேதனை அடைந்தார்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனக்கு சொந்தமான அரை ஏக்கர் வயலில் ரூ.25 ஆயிரம் செலவு செய்து சம்பா நெல் சாகுபடி செய்திருந்தார். தற்போது பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று வயல்வெளிக்கு மேல் சென்ற மின்கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பொறி விழுந்ததில் சாகுபடிக்கு தயாராக இருந்த நெற்பயிரில் தீப்பிடித்தது.

கடும் வெயில் வாட்டியதால் தீப்பிடித்த சற்று நேரத்தில் வயல் முழுவதும் மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் தீ முற்றிலும் பரவி நெல்வயல் எறிந்து சேதம் ஆனது. விவசாயிகள் வயலில் இருந்ததால் அருகில் உள்ள வயல்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள நெல்மணிகள் எரிந்து சேதம் ஆனது.

1961 ஆம் ஆண்டு தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அப்பொழுது அமைக்கப்பட்ட மின் கம்பிகள் தற்போது வரை மாற்றப்படவில்லை. இந்த கம்பிகள் பழமையாக உள்ள காரணத்தினால் காற்று அடிக்கும் நேரத்தில் இது போன்ற தீப்பொறி ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். அப்பொழுது சுமார் 100 குடும்பம் இருந்த நிலையில், தற்போது 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. மேலும் மின் மோட்டார்களும் மின் தேவை அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இது போன்ற பழமையான கம்பிகள் பாதிப்பு அடைந்த நிலையில், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகையால் மின்சார வாரியம் இந்த கம்பிகளை மாற்றியும் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தற்போது சம்பா நெல் அறுவடை நடைபெற உள்ள நிலையில் முற்றிலும் தீயில் கருகிய நெல் மணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து கருகிய நெல் பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: