போரூரில் பரபரப்பு போதை ஆசாமிக்கு சரமாரி அடி, உதை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துனர்; வைரலாகும் வீடியோ

பூந்தமல்லி: சென்னை போரூர் அருகே வெளியூர் செல்லும் பேருந்தில் வந்த போதை ஆசாமியை நடு ரோட்டில் இறக்கி விட்டு ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட சிலர் அவரை சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று போரூர் சுங்கச் சாவடி அருகே நேற்று முன் தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் இருந்த போதை ஆசாமி ஒருவர் நடத்துனரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த நபரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகளில் சிலர் இறங்கி வந்து அந்த போதை ஆசாமியை தாக்கத்தொடங்கினர். மேலும், அந்த நபரை நடுரோட்டில் மல்லாக்க படுக்க வைத்து,  ஓட்டுநரும், நடத்துனரும் அவர் மீது ஏறி உட்கார்ந்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினார்கள். அப்போது பேருந்தில் பயணம் செய்த முதியவர் ஒருவர், ஒரு கல்லை எடுத்து வந்து அவர் மீது போட வந்தார். அதனை மற்றவர்கள் தடுத்தனர். இதில், படுகாயம் அடைந்த அவர், ‘‘நான் என்ன தப்பு செய்தேன். எதற்காக எல்லோரும் என்னை அடிக்கிறீங்க.’’ என்று அந்த நபர் கதறினார். பின்னர்,  கீழே விழுந்த அவர் தடுமாறி எழுந்து நிற்கிறார்.

இதுதொடர்பான வீடியோ ஒன்று வாட்ஸ்-அப், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போதை ஆசாமியை ஓட்டுநர், நடத்துனர் சேர்ந்து ஏன் தாக்குகின்றனர். அவர் என்ன பிரச்னை செய்தார்?, யார் அவர்?, அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளில் பயணிகளை ஓட்டுநரும், நடத்துனரும் மரியாதை குறைவாக நடத்துவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், போதை பயணி ஒருவரை கீழே தள்ளி அடித்து, உதைத்து புரட்டி எடுக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: