ரூ.21,000 கோடி ஹெராயின் சிக்கிய அதானி துறைமுக வழக்கில் 2வது துணை குற்றப்பத்திரிகை: என்ஐஏ தாக்கல்

புதுடெல்லி: குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி ஹெராயின் போதைப்பொருள் சிக்கிய வழக்கில் 2வது துணை குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்துள்ளது. குஜராத்தில் அதானி குழுமம் நிர்வகித்து வரும் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 2,988 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானுக்கு கன்டெய்னரில் அனுப்பிய இந்த போதைப் பொருளை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த என்ஐஏ 16 பேர் மீது குற்றம்சாட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேலும் 9 பேர் மீது குற்றம்சாட்டி முதல் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் 6 ஆப்கானிஸ்தான் நிறுவனம் உட்பட 22 பேர் மீது குற்றம்சாட்டி 2வது துணை குற்றப்பத்திரிகையை என்ஐஏ நேற்று தாக்கல் செய்தது. மேலும், இந்த ஹெராயின் விற்பனை மூலம் இந்தியாவில் நாச வேலைகள் செய்ய லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு நிதி உதவி வழங்க இருந்ததாகவும் என்ஐஏ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: