மின்வாரிய உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜிலென்ஸ் பெண் இன்ஸ்பெக்டருக்கு போலி ஐஏஎஸ் அதிகாரி மிரட்டல்

சென்னை: மின்வாரிய பெண் உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசாரணை அதிகாரியான விஜிலென்ஸ் பெண் இன்ஸ்பெக்டரின் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த போலி ஐஏஎஸ் அதிகாரியை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டராக செல்வராணி பணியாற்றி வருகிறார். இவர், மின்வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி மாலை இன்ஸ்பெக்டர் செல்வராணி, தனது அலுவலகத்தில் பணியில் இருந்த போது, அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், தனது பெயர் சுபாஷ், ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். என் மீதான விசாரணை அறிக்கை ஒரு தலைபட்சமாக இருக்கிறது. என் மீது புகார் அளித்த மின்வாரிய உதவி பொறியாளராக பணியாற்றி வரும் சரிதா என்பவர் மீது, எந்த நடவடிக்கையும் உங்கள் விசாரணை அறிகையில் இல்லை’’ என்று கூறி மிரட்டியுள்ளார். அதோடு இல்லாமல், ‘உதவி பொறியாளர் சரிதா மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதுதொடர்பான தகவல்களை நான் பத்திரிகையில் வெளியிடுவேன்’ என்றும் கடுமையாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பெண் இன்ஸ்பெக்டர் செல்வராணி, எதிர் முனையில் பேசிய நபரின் செல்போன் எண்ணுடன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில், வழக்கு விசாரணை அதிகாரியான என்னை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்தார். புகாரின்படி, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, போலி ஐஏஎஸ் அதிகாரி சுபாஷ் என்பதும், அரசு பணிகளில் உயர் அதிகாரிகள் பலர் தெரியும் என்று ம் பணி மாறுதல் பெற்று தருவதாக அரசு ஊழியர்களிடம் பணம் பெற்று மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது.

போலி ஐஏஎஸ் அதிகாரி சுபாஷ் மீது கடந்த 28.1.2022ம் ஆண்டு மதுரவாயல் போலீசார் மோசடி வழக்கு ஒன்றில், சுபாஷ் போலி ஐஏஎஸ் அதிகாரி என கண்டுபிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் போலி ஐஏஎஸ் அதிகாரி சுபாஷ் மீது ஐபிசி 353, 506(1) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: