பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம் தமிழ்நாட்டுக்கு ஆபத்தா? புவியியல் வல்லுநர்கள் விளக்கம்

சிறப்பு செய்தி:

தமிழ்நாட்டில் பெரும் சேதத்தை விளைவிக்கும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். துருக்கியில் காசியண்டெப் நகரில் பிப்ரவரி 6ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு வானுயர்ந்த கட்டிடங்கள் பலவும் நொடிப்பொழுதில் தரைமட்டமானது.

இந்த நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை  உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,000ஐ தாண்டியுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு  உள்ளதாக புவியியல் வல்லுனர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 12ம் தேதி வடகிழக்கு மாநிலமான அசாமில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 13ம் தேதி மற்றொரு மாநிலமான சிக்கிமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சிக்கிமின் யுக்சோம் பகுதியிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனிடையே, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு, நிலநடுக்கம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதன்படி தெலங்கானா மாநிலத்தில் 19ம் தேதி காலை 7.25 மணிக்கு 10 வினாடிகள் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பூமி அதிக சத்தத்துடன் குலுங்கியதால் சத்தம் எங்கிருந்து வருகிறது என தெரியாமல் மக்கள் பீதி அடைந்தனர். அதேபோல், ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் பல்நாடு மாவட்டங்களில் நிலநடுக்கம் காலை 7.25 மணிக்கு சுமார் 12 வினாடிகள் நீடித்தது. இது, ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இதுபோல, அருணாசல பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இதுபோன்று இந்தியாவில் ஏற்படும் சிறிய சிறிய நில அதிர்வுகள் தான் பெரிய ஆபத்திலிருந்து பாதுகாப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 3 புவித்தட்டுகள் சந்திக்கும் புள்ளியே புவியியல் செயல்பாட்டின் முக்கியமான பகுதியாகும். இது மிகவும் கடினமானவை, இறுக்கமானவை, அதிக அழுத்தத்தை தாங்கக் கூடியது. ஆனால், அதிக அழுத்தம் காரணமாக புவித்தட்டுகள் உடையும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. மேலும், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம்  நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள உயர் நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது.

இதன் காரணமாக நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுமா, தமிழ்நாடு எந்த மண்டலத்தில் உள்ளது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நிலநடுக்கம் மண்டலம் என்ற வார்த்தை பொதுமக்களிடையே தற்போது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. இதுகுறித்து, மூத்த பொறியாளர் கல்யாணசுந்தரம் கூறியதாவது: நிலநடுக்கம் வர வாய்ப்புள்ள இடங்களில் அதன் உத்தேச வீரியத்தைப் பொறுத்து இந்திய பகுதிகளை சில மண்டலங்கலாக  இந்திய தர நிர்ணய வழிகாட்டுதல்களின்படி வல்லுநர்கள் பிரித்துள்ளனர். மண்டலம் - 2ல் லேசான நில நடுக்கமும், மண்டலம் -5ல் மிகக் கடுமையான நில நடுக்கத்தையும் எதிர்பார்க்கலாம் என்பது இதன் பொருள். மண்டலம் 3ல் என்றால் மிதமான நிலநடுக்கத்தை குறிக்கும்.

இந்த மண்டலங்கள் கடந்த காலத்தில் அந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்க வரலாறும், அப்பகுதியில் பூமிக்கடியில் உள்ள பாறைகளில் காணப்படும் பிளவுகள் மற்றும் விரிசல்களுமே மண்டலங்களை தீர்மானிக்கின்றன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மண்டலம் 2லும், சென்னை, கோவை, கன்னியாகுமரி மற்றும் சில பகுதிகளில் மண்டலம் -3லும் வருகின்றன. தமிழ்நாட்டில் பெரும் சேதத்தை விளைவிக்கும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு, மண்டலம் 2ல் தோராயமாக ரிக்டர் அளவு கோலில் 4.50 வரையிலும், மண்டலம் 3ல் தோராயமாக ரிக்டர் அளவு கோலில் 6.0 வரையிலும் எதிர்பார்க்கலாம்.

ரிக்டர் அளவு கோலில் 7.80 ஆக உள்ள நிலநடுக்கத்தின் சக்தி ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக குறையும்போது அதன் சக்தி சுமார் 500 மடங்கு குறையும். எனவே தமிழ்நாட்டில் பெரும் சேதத்தை விளைவிக்கும் நிலநடுக்கம் வர வாய்ப்பில்லை என வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆனால், அதே சமயத்தில் எதிர்பாக்கப்படும் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில், பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை கட்டுவது இன்றியமையாதது ஆகும். அதற்கான கூடுதல் செலவு சதுர அடிக்கு சுமார் ரூ.100 முதல் 200ஐ கூட தாண்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* கடந்த 200 வருடங்களில் தமிழ்நாட்டில் 1900ம் ஆண்டு பிப்ரவரி 8ம் நாள் மட்டுமே 6.0 என்ற அளவிற்கு நிலநடுக்கம் பதிவாகியது. இதுவே அதிக அளவில் பதிவான நிலநடுக்கம்.

* துருக்கியில் உள்ள கட்டிடங்கள் நில  அதிர்வுகளை தாங்கக் கூடிய அளவிற்கு வலுவாக கட்டப்படவில்லை. முறையான  விதிமுறைகள் பின்பற்றப்படாததால்தான் பல ஆயிரம் கட்டிடங்கள் சீட்டுக்  கட்டுபோல் சரிந்து பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

* கடந்த 2 வாரங்களில் துருக்கியில் 6,040 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 40 நிலநடுக்கம் 5-6 ரிக்டர் அளவிலானவை. மொத்தம் 3.84 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.

* எனவே புவியியல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் அடிக்கடி ஏன் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தை போக்கும் வழியில் ஆராய்ச்சி செய்து தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

* தமிழ்நாட்டின் அமைப்பானது மண்டலம் 2 மற்றும் மண்டலம் 3 பகுதியில் அமைந்துள்ளது.

* மண்டலம் 3

சென்னை, கோயம்புத்தூர், கல்பாக்கம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி, தர்மபுரி மற்றும் பல பகுதிகள்.

* மண்டலம் 2

கடலூர், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, மதுரை மற்றும் பல பகுதிகள்.

200 வருடங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்க விவரங்கள்

நாள்    பகுதிகள்    பதிவான அளவு(ரிக்டர்)

11.04.2021    செங்கம், திருவண்ணாமலை    3.0

22.7.2018    ஏற்காடு, சேலம்    3.6

27.12.2017    கயத்தாறு, தூத்துக்குடி    3.2

26.9.2013    ஆரணி, திருவண்ணாமலை    3.4

29.11.2012    ஒகேனக்கல், தர்மபுரி    3.4

27.5.2012    ஒகேனக்கல், தர்மபுரி    3.3

27.3.2012    துறையூர், திருச்சி    3.6

18.11.2011    சின்னமன்னூர், தேனி    3.0

15.11.2011    காங்கேயம், திருப்பூர்    2.8

29.8.2011    ஜவ்வாது மலை, திருவண்ணாமலை    3.1

12.8.2011    ஜெயங்கொண்டம், அரியலூர்    3.5

21.6.2011    தெற்கு தர்மபுரி    3.1

21.6.2011    ஓசூர், கிருஷ்ணகிரி    2.8

20.6.2011    பெண்ணாகரம்    2.8

18.5.2011    திண்டுக்கல்    3.2

7.6.2008    ஜவ்வாதுமலை, திருவண்ணாமலை    3.7

22.3.2005    அரூர், தர்மபுரி    3.8

25.9.2001    புதுச்சேரி மற்றும்

தமிழக கடற்கரைபகுதி    5.2

25.9.2001    புதுச்சேரி மற்றும்

தமிழக கடற்கரைபகுதி    4.1

3.1.2001    தர்மபுரி    3.4

25.8.1998    பாலக்காடு, தர்மபுரி    4.1

6.12.1993    மன்னார் வளைகுடா    5.2

8.7.1988    இடிக்கி-தேனி எல்லைபகுதி    3.5

7.7.1988    இடிக்கி-தேனி எல்லைபகுதி    4.2

7.7.1988    இடிக்கி-தேனி எல்லைபகுதி    4.5

27.11.1984    திருப்பத்தூர், வேலூர்    4.7

29.7.1972    கோயம்புத்தூர்    5.0

1966    தாம்பரம்    3.7

17.12.1959    ஓமலூர், சேலம்    4.3

1952    ரங்கமலை, கரூர்    5.0

10.9.1938    மன்னார் வளைகுடா    5.8

11.1.1934    விருதுநகர்    4.3

8.2.1900    வாளையாறு, கோயம்புத்தூர்    6.0

12.8.1889    சென்னை    4.3

28.2.1882    ஊட்டி, நீலகிரி    5.7

3.7.1867    விக்கிரவாண்டி, விழுப்புரம்    5.7

2.8.1865    வாணியம்பாடி, வேலூர்    4.3

4.3.1861    சேலம்    4.3

20.3.1860    சேலம்    3.7

17.1.1860    சேலம்    4.3

17.12.1859    சேலம்    4.3

5.2.1859    போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி    4.3

3.1.1859    போளூர், திருவண்ணாமலை    5.0

30.12.1858 பேச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி    4.3

2.3.1823    ஸ்ரீபெரும்புத்தூர், காஞ்சிபுரம்    5.3

29.1.1822    வந்தவாசி, திருவண்ணாமலை    5.0

16.9.1816    சென்னை    4.3

10.12.1807    சென்னை    4.3

Related Stories: