பெருங்குடி கல்லுக்குட்டையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் 40 ஆண்டாக தவிக்கும் மக்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகளை வழங்கும் ஐடி நிறுவனங்கள், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் என தரமணி, பெருங்குடி ரயில் நிறுத்தம் ஆகியவற்றிற்கு அருகில் கல்லுக்குட்டை பகுதி உள்ளது. கடந்த 10 வருடங்களில் பல முன்னேற்றங்களை கண்ட ஓஎம்ஆர் சாலைக்கு அருகில்  40 வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல்   கல்லுக்குட்டை பகுதி மக்கள்  வசித்து வருகின்றனர்.  சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கும் இப்பகுதிக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பொதுக்குழாய் மற்றும் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் அப்பகுதி மக்களுக்கு போதவில்லை என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வனிதா கூறியதாவது: எங்களுக்கு வீடு வசதி இல்லாத காரணத்தினால் தான் இப்பகுதிகளில் வசிக்கிறோம். கிட்டத்தட்ட 15 வருடங்களாக தண்ணீருக்காக போராடி தண்ணீர் பெற்றோம். அப்படி தான் மின்சாரத்திற்கும்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு  திமுக ஆட்சியில் தண்ணீருக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போதியளவு தண்ணீர் எந்தவொரு குடும்பத்திற்கும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக சாலைகள் இல்லாததால் ஆட்டோ, டாக்சி போன்ற தனியார் வாகனங்கள் வர மறுக்கின்றனர். பேருந்து நிலையம் செல்லக்கூட மாணவர்கள் கால் வலிக்க நடந்தே செல்லும் அவலநிலை உள்ளது. அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸ் ஊருக்கு வர மறுப்பதால் கர்ப்பிணிகளும், முதியவர்களும்  பாதிக்கப்படும் நிலை உள்ளது. பள்ளி மாணவி கீர்த்தி கூறியதாவது: இந்த பகுதிக்கு சாலை வசதியே கிடையாது. மேடு பள்ளங்களாக இருக்கும். மழைக்காலங்களில் நடந்து செல்ல முடியாது. வாகனங்கள் கூட  இப்பகுதியில் செல்ல  முடியாது. சாலைகள் பெரிதளவில் இருக்கிறது. ஆனால் அவை மேம்படுத்தப்படவில்லை.

மழைநீர் வடிகாலும், கழிவு நீர் கட்டமைப்பும் இல்லாததால் ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் தேங்கி நிற்கும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து நோய்தொற்று பரவுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னையை அழகுபடுத்த பல  திட்டங்களை வகுத்து வரும் மாநகராட்சி அடிப்படை வசதிகள் ஏதுமின்றி  காணப்படும் இதுபோன்ற பல பகுதிகளை கட்டமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  தெரிவித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு குடியிருப்பு பட்டா இல்லை என்பதால் நடைமுறை சிக்கல்களை களைந்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர முயன்று வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: