ரேலா மருத்துவமனை தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தாம்பரம்: குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரேலா, உலகில் மகத்தான சாதனை நிகழ்த்திய கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை, சிக்கலான கல்லீரல்-கணைய அறுவை சிகிச்சை மற்றும் பிற தலைப்புகளில் 400க்கும் அதிகமான அறிவியல் கட்டுரைகளையும், ஆய்வு முடிவுகளையும் இவர் எழுதி பிரசுரித்திருக்கிறார். இதுவரை 6000க்கும் அதிகமான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளை ரேலா வெற்றிகரமாக செய்திருக்கிறார். பிறந்து 5 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு செய்யப்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சையும் இதில் உள்ளடங்கும். இச்சாதனையின் மூலம் கின்னஸ் சாதனை பதிவேட்டில் இவர் இடம்பெற்றிருக்கிறார்.

இந்திய கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை சங்கத்தின் தலைவராக திறம்பட செயல்பட்டு வரும் அவர், கவுன்சில் ஆப் தி டிரான்ஸ்பிளன்டேஷன் சொசைட்டியின் தெற்கு/ தென்கிழக்கு ஆசியாவிற்கான பொது ஆலோசகராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் 28 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டிருக்கும் சிறப்பு நிபுணரான ரேலா, 2009ம் ஆண்டில் சென்னையில் கல்லீரல் நோய் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சைக்கென மையத்தை தொடங்கினார். அதன்பிறகு மிக விரைவிலேயே, இந்தியாவில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைக்கான மிகப்பெரிய செயல்திட்ட அமைவிடமாக இது உருவெடுத்தது.

அதைத்தொடர்ந்து மாறுபட்ட பாதிப்புகளை கொண்ட நோயாளிகளது சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது என்ற குறிக்கோளுடன் ரேலா மருத்துவமனையை இவர் தொடங்கினார். சர்வதேச அளவிலான மருத்துவ மையமாகவும் மற்றும் நான்காம் நிலை உயர் பராமரிப்பை வழங்கும் மருத்துவமனையாகவும் இது இயங்கி வருகிறது. இந்நிலையில் ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற ஒரு முன்னோடியுமான முகமது ரேலாவுக்கு ஏஎச்பிஐசிஓஎன் 2024 என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒருநாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

The post ரேலா மருத்துவமனை தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது appeared first on Dinakaran.

Related Stories: