ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் கிடைக்காததால் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகள் தாமதம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: நாட்டின் அதிவேக ரயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரயில்களை பின்பற்றி, புதிய மாடல் ரயில்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. அதில் வந்தே மெட்ரோ ரயில்கள் குறிப்பிடத்தக்கவை. முக்கியமான நகரங்களுக்கு இடையில் குறுகிய தூர சேவையாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதாவது, 100 முதல் 250 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையில் மட்டும் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மொத்தம் 12 பெட்டிகள் கொண்டதாக முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும். மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒவ்வொரு பெட்டியிலும் 300 பயணிகள் வரை பயணம் செய்யலாம். தானியங்கி பிளக் கதவுகள், வீல் சேர் லெவாரட்டரி வசதி, பயணிகள் டாக் பேக் சிஸ்டம், தீயை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, ரயில் பெட்டிகள் மோதிக் கொள்ளாத வகையில் கவாச் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

வந்தே மெட்ரோ ரயில்கள் எந்தெந்த நகரங்களுக்கு இடையில் இயக்கலாம் என்று முதல்கட்ட பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், மும்பை புறநகர் ரயில், லக்னோ – கான்பூர், சென்னை – திருப்பதி, ஆக்ரா – மதுரா, புவனேஸ்வர் – பாலசோர், டெல்லி – ரேவாரி ஆகிய வழித்தடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே மெட்ரோ ரயில்கள் கடந்த மார்ச் மாதமே பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதன் மாதிரிக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் தர வேண்டியுள்ளது.

இதில் தொடர்ந்து கால தாமதம் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மாதிரிக்கு ஒப்புதல் கிடைத்தால் தான், அதேபோல் பல்வேறு ரயில் பெட்டிகள் விரைவாக தயாரிக்க முடியும். அப்போது தான் பயன்பாட்டிற்கு வரும் போது இயக்குவதற்கு போதுமானதாக இருக்கும். ஒப்புதல் கிடைப்பது தாமதம் ஆகி வருவதால் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘அதிகப்படியான பயணிகளை ஏற்றி செல்ல வேண்டியுள்ளதால் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பெட்டிகளை உட்படுத்த வேண்டியுள்ளது. இதனால் தான் தாமதமாகி வருகிறது. இதுதவிர வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளில் சில மாற்றங்களை செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும் தாமதத்திற்கு காரணம்,’’ என்றனர்.

The post ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் கிடைக்காததால் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகள் தாமதம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: