வாட்ஸ்அப் வீடியோ காலில் பெண்களை நிர்வாணமாக பேச வைத்து 50 பேரிடம் பல லட்ச ரூபாய் வசூல்: கும்பலுக்கு போலீஸ் வலை

திருமலை: ஆந்திராவில் ஒன்றிய அரசு ஊழியர் ஒருவருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து வாட்ஸ்அப் வீடியோ காலில் போன் அழைப்பு வந்தது. காதல் என்ற பெயரில் பேசத் தொடங்கிய அந்த பெண் கேட்ட அனைத்திற்கும் அந்த ஊழியர் பதிலளித்தார். சில நிமிடங்களில் வாட்ஸ் அப் வீடியோ காலில் வந்த பெண், ஆடை இல்லாமல் தனது அந்தரங்க பகுதிகளை காண்பித்துள்ளார். பின்னர் அவரையும் அதே போன்று காண்பிக்கும்படி கூறியுள்ளார். பெண்ணின் மோகத்தில் அவரும் ஆடையில்லாமல் காண்பித்துள்ளார். இதை அந்த பெண் வீடியோ பதிவு செய்துகொண்டார்.

சில நிமிடங்களுக்கு பிறகு போனில் பேசிய ஒரு நபர், ‘ஆடை இல்லாமல் வீடியோ கால் செய்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்தாக போலீசில் புகார் அளிப்போம் என்றும், உங்கள் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவோம்’ என கூறியுள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அரசு ஊழியர் மோசடி கும்பல் கேட்டபடி சுமார் ₹5 லட்சம் வரை கொடுத்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்வார்கள் என்ற அச்சத்தில் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர்.

அதில் இதேபோன்று முன்னாள் நீதிபதி, மென்பொருள் பொறியாளர் என ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் இந்த கும்பல் பணத்தை பறித்தது தெரிய வந்தது. இதில் காமாரெட்டியை சேர்ந்த இளைஞர் ₹60 ஆயிரமும், முன்னாள் நீதிபதி ₹1 லட்சமும் இழந்துள்ளனர். இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் அளித்து வருகின்றனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மோசடிக்கும்பல் ராஜஸ்தானில் இருந்தபடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மோசடிக்கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: