ஒட்டன்சத்திரம் பகுதியில் பாதுகாப்பற்ற சாலை விரிவாக்க பணிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தவிப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதி திண்டுக்கல், மதுரை, தேனி, பழநி, போடி, ராமேஸ்வரம், சென்னை, திருப்பூர், கோவை, ஊட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லெக்கையன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தொடர்ந்து சாலையை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சாலையின் குறுக்ேக சிறு பாலங்கள், தடுப்புச் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி பாலங்கள் அமைப்பதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. இந்த குழிகள் தோண்டிய இடத்தில் தகுந்த பாதுகாப்பு வேலிகள் ஏதும் அமைக்கப்படவில்லை. அதேபோல் தடுப்புகளும் முறையாக இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் உள்ளே விழுகின்றனர். இதுபோன்ற விபத்துகளில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சாலையோரம் மிகப்பெரும் பள்ளங்களை விரிவாக்க பணிகளுக்காக உருவாக்கியுள்ள பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அவற்றின் ஓரத்தில் முறையாக தடுப்புகள் மற்றும் வேலிகளை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

சில இடங்களில் இரும்பு டிரம் மீது கருப்பு, வெள்ளை வர்ணம் பூசி வைத்துள்ளனர். ஆனால் இரவு நேரத்தில் வருவோர் இதனை சரிவர காண முடியாது பள்ளத்தில் வாகனங்களுடன் விழுகின்றனர். அதேபோல் சில இடங்களில் கட்டப்படும் பாலத்தின் ஓரத்தில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதுபோல் பணிகளை மேற்கொள்வோர் பொதுமக்களின் நலன் குறித்த அக்கறையின்றி இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் கூறும்போது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பிற்காலத்தில் நெரிசல் ஏற்படாத வகையிலும் நான்கு வழிச்சாலை அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்த சாலையில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதை தற்போது அகற்றிவிட்டு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சென்டர் மீடியனை அகற்றிய பின்பு புழுதி, தூசி அதிகம் உருவாகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

மேலும் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் உணவகங்கள், பேக்கரி, டீக்கடை, பழக்கடைகள், சாலையோர காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்திலும் தூசி படிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நெடுஞ்சாலையில் இடிபட்ட கட்டிட கழிவுகளை ஆங்காங்ேக கொட்டி வைத்து ஏற்கனவே குறுகிய சாலையில் மேலும் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை உருவாக்கி வருகின்றனர். எனவே அவற்றை முற்றிலுமாக அகற்றிவிட்டு பணிகளை தொடர வேண்டும். மேலும் பாலம் கட்டும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்து இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: