1,100 பேருக்கு விலையில்லா இணையவழி வீட்டு மனைப்பட்டா

*ஆ.ராசா எம்.பி. வழங்கினார்

மஞ்சூர் : குந்தா மற்றும் ஊட்டியில் நடந்த விழாவில் 1,100 பயனாளிகளுக்கு விலையில்லா இணையவழி வீட்டு மனைப்பட்டாக்களை ஆ.ராசா எம்.பி. வழங்கினார்.நீலகிரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா இணையவழி வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்குந்தா 1,2, மேல்குந்தா, கிண்ணக்கொரை உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த 592 பயனாளிகளுக்கு இணைய வழி வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா மஞ்சூர் மின் வாரிய மேல்முகாமில் உள்ள மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ முன்னிலை வகித்தார். ஊட்டி எம்.எல்.ஏ.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த், திமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜூ, ஊட்டி நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், குந்தா தாசில்தார் சுமதி, ஊட்டி தாசில்தார் சங்கர் கணேஷ், கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, துணைத்தலைவர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையது முகம்மது வரவேற்றார்.

இதில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா இணையவழி வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை உள்பட எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குந்தா பகுதியில் உள்ள மக்களை நேரில் சந்தித்து பட்டா வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பகுதியில் பட்டா வழங்குவது என்பது சாதாரணமான காரியம் இல்லை. மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பிரத்யேகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் இன்றுடன் சேர்த்து 4 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல் கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் 3 ஆயிரம் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் தான். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் மீது முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி இம்மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும், நீலகிரி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையிலும் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து ஊட்டி வட்டத்திற்குட்பட்ட நஞ்சநாடு, கக்குச்சி வருவாய் கிராமங்களை சேர்ந்த 508 பயணாளிகளுக்கு விலையில்லா இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை ஆ.ராசா. எம்.பி வழங்கினார்.

விழாவில் ஊட்டி தெற்கு (மேற்கு) ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், (கிழக்கு) ஒன்றிய செயலாளர் பரமசிவன், கீழ்குந்தா பேரூர் கழக திமுக செயலாளர் சதீஷ்குமார், கீழ்குந்தா பேரூராட்சி கவுன்சிலர்கள் மாடக்கன்னு, சண்முகன், காஞ்சனா, மாலினி, திமுக பேரூர் கேழக துணை செயலாளர் சிவக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Related Stories: