பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

*பேருந்து, ரயில் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்

கோவை : பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊருக்கு செல்ல காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்நிலையங்களில் குவிந்த பொதுமக்களால் கூட்ட நெரிசல் காணப்பட்டது. கடந்த 4 நாட்களில் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பொங்கல் பண்டிகை நாளை (15-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையால் கோவையில் விடுதி மற்றும் வீடுகளில் தங்கி படித்து வரும் கல்லூரி மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்கு நேற்று முதல் புறப்பட்டனர்.

இதுதவிர, முன் விடுப்பு எடுத்து அரசு அலுவலர்கள், தனியார் கம்பெனி, நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று முதல் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் குவிய துவங்கினர். இதனால், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும், பேருந்துகளில் பயணிகளின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 10-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு பேருந்துகள் நாளை வரை இயக்கப்படுகிறது. மேலும், பயணிகள் வசதிக்காக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி மற்றும் தென்மாவட்டம் செல்லும் பேருந்துகளும், சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதில், கோவையில் இருந்து மதுரை, திருச்சி, தேனி, சேலத்துக்கு மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும், சிங்காநல்லூர், சூலூர் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களுக்கும், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதனால், நகரில் இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்திலும் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்பட்டது. மேலும், கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், சிங்காநல்லூரில் இருந்து மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல பேருந்து பயணிகள் குவிந்தனர்.

இதனால், அங்கு பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ஊருக்கு விரைந்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்கள் பேருந்துகளில் இருக்கைக்கு போட்டியிட்டு ஏறிச்சென்றனர். ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பேருந்துகள் மட்டுமின்றி பலர் ரயில்கள் மூலமாகவும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், கோவை ரயில்நிலையத்தில் அதிகளவிலான கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, சென்னை, கேரளா மார்கமாக செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ேகாவையில் இருந்து கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் ரயில், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் வெளியூர் சென்றனர்.

Related Stories: