துரைப்பாக்கம் சர்வீஸ் சாலையில் பைக்கில் 4 பட்டா கத்தியுடன் வந்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது: போலீசார் விசாரணை

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் வாகன தணிக்கையின்போது, பைக்கில் 4 பட்டா கத்திகளுடன் வந்த பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். துரைப்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார், துரைப்பாக்கம் சிக்னல் சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் பைக் திருப்பிக்கொண்டு தப்பியோட முயன்றனர்.

உடனே, அவர்களை விரட்டி சென்று, மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை சோதனை செய்ததில், கோணி பையில் 4 பட்டா கத்திகள் இருந்ததால், போலீசார் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பெரும்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி கல்லறை ஜான் (33), அவனது கூட்டாளி சலூன் கடையில் பணியாற்றும் அர்ஜூன் (19) என்பதும், இதில், ஜான் என்பவர் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த ஜனவரி 31ம் தேதி தான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரிந்தது.

சிறையில் இருந்து வெளியே வந்த கல்லறை ஜான், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் இம்மானுவேல் என்பவரை பார்த்துள்ளார். பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பூ வியாபாரம் செய்யும் தனது தாயார் திருப்புரத்தை பார்த்துவிட்டு, பிளாட்பாரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற கல்லறை ஜான், வீட்டிலிருந்த 4 பட்டா கத்தியை எடுத்து பாதுகாப்பிற்காக எடுத்து சென்றதும் தெரியவந்தது. மேலும், இவர் மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 24 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, யாரையேனும் கொலை செய்ய இவர்கள் வந்தார்களா, என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: