வங்கி அதிகாரி பேசுவதாக கூறி இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் அபேஸ்: அம்மாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தவருக்கு நடந்த கொடுமை

சென்னை: தனது அம்மாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நூதன முறையில் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்களை பெற்று ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பத்ரி நாராயணன் (42). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தற்போது வசித்து வருகிறார். இவரது தாயார் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது அம்மாவை பார்க்க குடும்பத்துடன் கடந்த டிசம்பர் மாதம் பத்ரி நாராயணன் சென்னை வந்தார்.

நேற்று முன்தினம் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், வீட்டின் அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை செலுத்தியதும், ரகசிய எண்ணை 2 முறை தவறுதலாக பதிவு செய்துள்ளார். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவரது ஏடிஎம் கார்டை வங்கி அதிகாரிகள் முடக்கினர். இதனால் பணம் எடுக்க முடியாமல் பத்ரி நாராயணன் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் அழைப்புக்கு வங்கியில் இருந்து பேசுவதாக ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், பிளாக் செய்யப்பட்ட ஏடிஎம் கார்டை மீண்டும் விடுவிக்க வேண்டும் என்றால், நாங்கள் அனுப்பும் குறுஞ்செய்தில் உள்ள லிங்கை அழுத்த வேண்டும் என்று கூறி இணைப்பு துண்டித்துவிட்டார்.

பிறகு அந்த மர்ம நபர், பத்ரி நாராயணன் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் இருந்த லிங்க்கை பத்ரி நாராயணன் தொட்டவுடன், அவரது ஏடிஎம் கார்டின் 16 இலக்க எண் மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்யும்படி தெரிவித்துள்ளது. அதன்படி, பதிவு செய்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 3 தவணைகளில் ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த பத்ரி நாராயணன், உடனே வங்கிக்கு சென்று விசாரித்த போதுதான் மோசடி நபர்கள் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அனைத்து விவரங்களையும் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சம்பவம் குறித்து உரிய ஆதாரங்களுடன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பத்ரி நாராயணன் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: